No icon

ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு ஆமோ 6:1, 4-7, 1 திமொ 6:11-16, லூக் 16:19-31

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுகாலத்தின் 26 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இறைவன் நம்மை நிறைவளங்களோடு ஆசீர்வதித்திருப்பது, நாமும் நம் குடும்பமும் மட்டும் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; மாறாக, உதவி என்று நம்மை நாடி வருவோருக்கு பாராமுகமாய் இராமல், கனிந்த உள்ளத்தோடு உதவிடவே நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை, நாம் உணர்ந்து கொள்ள இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

செல்வந்தன் ஆடம்பரமாக வாழ்ந்ததற்காகவோ, பல்சுவை உணவை உண்டதற்காகவோ இறைவன் அவரை தண்டிக்கவில்லை; மாறாக, அவரது மேசைக்கடியில் விழுந்த ரொட்டி துண்டுகளை உண்ண ஆசைப்பட்ட இலாசருக்கு, உதவி செய்யாமல் பாராமுகமாய் இருந்ததைக் கண்டே இறைவன் அவரை தண்டிக்கிறார். இறந்து பாதாளத்திற்கு சென்ற பிறகும், இலாசரை அடிமை போல பார்க்கும் மனநிலையை செல்வந்தன் மாற்றிக் கொள்ளவில்லை. வாழ்நாட்களில் தனது வீட்டு வாசலில் முன்பே இருந்த இலாசரைப் பற்றி நினைக்காத செல்வந்தன், இறந்த பிறகு தன் சகோதரர்களுக்காகப் பரிந்து பேசியவனிடம், நமக்கிடையே ஒரு பெரிய பிளவு இருக்கிறது என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் எப்பொழுதெல்லாம் பிறருக்கு உதவாமல், பாராமுகமாய் இருக்கிறோமோ, எப்பொழுதெல்லாம் நமது குடும்பத்திற்காக மட்டும் பாடுபடுகிறோமோ, அப்பொழுதெல்லாம் நமக்கும், இறைவனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய பிளவு இருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாய், இத்திருப்பலியில் இறையருளை கெஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

பிறரைப் பற்றி கவலைப்படாமல், தானுண்டு தன் வயிறுண்டு என்று உண்டு கொழிப்போருக்கு ஐயோ கேடு. அவர்களின் அழிவு நாட்கள் மிகத் தொலைவில் இல்லை என்று கூறும்  ஆமோஸ் இறைவாக்கினரின் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நீங்கள் கடவுளின் மனிதர்கள். எனவே, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடுங்கள். நம்பிக்கை என்னும் போராட்டத்தில் ஈடுபட்டு நிலை வாழ்வை பெற்றுக் கொள்ளுங்கள். இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்பு தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்களை ஆசீர்வதியும். குறிப்பாக, திருத்தந்தை அவர்கள் கஜகஸ்தான் நாட்டில் மேற்கொண்டுள்ள திருத்தூது பயணம் சிறப்பாக அமையவும், மக்கள் மனம் மாறிடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் பரம் பொருளே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் மட்டும் வளமோடு பார்த்துக் கொள்ளாமல், மக்கள் அனைவருக்கும் தேவையானவற்றை செய்து வழி நடத்த வேண்டுமென்று இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் விண்ணக தந்தையே! எங்கள் பங்கிலும், இல்லங்களிலும் உதவி என்று நாடி வருவோருக்கு நாங்கள் பாராமுகமாயிராமல், கனிந்த உள்ளத்தோடு உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம தந்தையே! கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும், நீர் எங்களுக்கு தந்திருக்கும் நம்பிக்கை வாழ்வில் உறுதியாய் நிலைத்திருந்து, உம்மைப் பற்றிக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானக தந்தையே! எங்களின் உதவியை எதிர்நோக்கி அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் வாழும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு நாங்கள் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment