No icon

05.09.2022

ஆசிரியர் - ஒரு நற்செய்தி!

ஆசிரியப் பணி ஒர் அழைப்பு

உலகிலேயே இரு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை, மற்றது ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் உயிரைப் பெறுகிறோம், ஆசிரியரின் வகுப்பறையில் நாம் வாழ்வைப் பெறுகிறோம். மாதா, பிதா, குரு தெய்வம் என்று, ஆசிரியரை தெய்வத்திற்கு அருகில் வைத்துப் பார்ப்பது, நமது பாரம்பரியம். ஓர் ஆசிரியர் ஆயிரம் குருக்களுக்கு சமம் என்கிறார் இங்கர்சால் என்ற அறிஞர்.

ஆசிரியப் பணி பொருள்களை உருவாக்கும் பணி அல்ல; மாறாக, வலுவற்ற பிஞ்சு நெஞ்சங்களோடு உறவாடி, ஒளிர்ந்து ஒளிர்விக்கும் தெய்வீகப் பணியாகும். இன்றைய இளம் உள்ளங்கள் ஆசிரியரின் நடை, உடை, பேச்சு, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பார்த்து, பின்பற்றும் மாதிரி மனிதனாய் வாழும் கலையே ஆசிரியரின் ஆன்மீகமாக இருக்க வேண்டும். ஆசிரியப்பணி பணத்தை முதன்மைப்படுத்தும் தொழில் அல்ல; மாறாக, தியாகம் நிறைந்த ஆசிரியர்பணி ஒர் அழைப்பாகும், அர்ப்பணிப்பாகும், ஆழமானதாகும், அர்த்தமுள்ளதாகும், ஆன்மீகமாகும்.

ஆசிரியர் - மாணவர் யதார்த்த நிலை

கொரோனா நோயின் தாக்குதலுக்குப் பின்பு, ஆசிரியர்-மாணவர்  சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கூட வாசனை அறியாத மாணவ, மாணவியர்கள் ஊடகங்களின் தாக்குதலால் ஒழுக்கத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கியிருப்பது இன்றைய யதார்த்தமாகும். மாணவ, மாணவியர் மதுவிற்கும், காதல் மோகத்திற்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமையாக இருப்பது வருத்தத்திற்குரியது. இது மாணவர்களின் யதார்த்தம்.

ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் ஒரு சில இடங்களில் மதவெறி, சாதிவெறி, பணிவெறி, காமவெறியோடு மாணவ, மாணவியரைப் பொருட்களாகப் பாவித்து, சமுதாயப் பிரச்சனைகளைத் தூண்டுவது, ஆசிரியப் பணிக்கு இழுக்கானது. வட்டிக் கணக்கு, வியாபாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை முதன்மை வேலையாக்கி, ஆசிரியப் பணியை பொழுதுபோக்காகப் பார்ப்பது, வேலியே பயிரை மேய்வதாய் உள்ளது.

ஆசிரியர் விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த அற்புத மனிதர் அல்ல; முறையான சமுதாயத்தின் பிரதிநிதியே அவர். இருப்பினும் ஆசிரியப் பணி ஆன்மீகப் பணியாய் அமைய வேண்டும். இக்கருத்தை ஆர்னாலட் என்ற கல்வியியல் அறிஞர் கூறுகையில், “உண்மையான ஆசிரியர் வாழ்ந்து காட்டுவதன் மூலம், பிஞ்சு உள்ளங்களில் ஒளிபாய்ச்சி உருமாற்றுவார்.” ஆசிரியப் பணி ஆன்மீகப் பணி என்று கூறுகையில், அது மூன்று முக்கியப் பரிமாணங்களை உள்ளடக்கியது. அப்போதுதான் ஓர் ஆசிரியர் நற்செய்தியாக மலர்ந்திடுவார்.

கருத்துக்களை கூறுவதில் கலைஞன்

ஆன்மீகப் பரிமாணத்தின் முதல்படியாக, மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களை முறைப்படுத்தி, மாணவர்கள் நிலைக்கு இறங்கிவந்து, கற்றுத் தரும் கலையாகும். தெரிந்த அறிவு நிலையிலிருந்து, தெரியாத அறிவு நிலைக்கு அழைத்துச் செல்லும் வேளையில், மாணவ, மாணவியரோடு சிந்தித்து, உறவாடி கருத்துக்களைத் தருவதாகும். தனது திறன்களை பயன்படுத்த வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகளை தந்திரத்தோடு கற்பிப்பது ஆகும். அதற்கு மாறாக, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு, கருத்துக்களை மனப்பாடமாக ஒப்புவித்து, நீண்டதொரு உரை நிகழ்த்தி, மனப்பாடப் புழுக்களை உருவாக்கும் இயந்திர ஆசிரியராகத் திகழக்கூடாது.

பயிற்சி தரும் பண்பாளன்

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சிஎன்ற வாக்கிற்கிணங்க, மாணக்கர்களை அனைத்துப் பரிமாணங்களிலும் வளர்த்தெடுப்பது ஆசிரிய - ஆன்மீகப் பணியின் இரண்டாவது பரிமாணமாகும். “கல்விஎன்ற வார்த்தையின் மூலப்பொருளேவெளிக்கொணர்தல்ஆகும். மாணவர் நிலைக்கு இறங்கிவந்து, மாணவர்களாகவே மாறி, அவர்தம் உள்ளத்தில் பொதிந்துள்ள திறமைகளையும், தனிப்பண்புகளையும் வெளிக்கொணர்ந்து வளர்த்திட வேண்டும். அரசும், நிர்வாகமும் மாணவர்களின் வாழ்க்கைக் கல்வியில் வளர்ந்திட அறிமுகப்படுத்தும் பல்வேறுபட்ட இயக்கங்களிலும், செயல் திட்டங்களிலும் முழுமையாக ஈடுபட வேண்டும்.

கலைப் போட்டிகள், விழாக்கள், நன்னெறி, உடற்கல்வி வகுப்புக்கள் போன்றவை பாடம் நடத்திடப் பாடவேளைகளாக மாற்றப்படுவதை விடுத்து, படைப்பாற்றலுடன் கூடிய பங்கேற்பை வளர்த்திட வேண்டும். உடல் உறுப்பில் ஒன்று மட்டும் வளர்ச்சியடைவது நோயாகும். வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் பயிற்சி தந்திடும் பண்பாளராக விளங்குவது ஆசிரியப் பணியின் இரண்டாவது பரிமாணமாகும். நல்வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகளைக் கற்றுத்தரும் பண்பே ஆசிரியர் ஆன்மீகத்தின் இரண்டாவது பரிமாணம்.

ஆசிரியர் ஒரு நற்செய்தி

வருங்கால சமுதாயத்தை உருமாற்றி, உருகொடுக்கும் சமுதாய மாற்றத்தின் ஒரு சிறிய அலகாக வகுப்பறைகளை ஆசிரியர் மாற்றிட வேண்டும் என்பார். பவுலோ பெரைரா என்ற கல்வியியல் அறிஞர், பள்ளிகள் கலாச்சார வட்டங்களாகத் திகழவேண்டும். ஒடுக்கப்பட்டோருக்கும், பின்தங்கியோருக்கும் முன்னுரிமை தராத எந்த ஆசிரியரும்கிறிஸ்து என்ற ஆசிரியரைப் பிரதிபலிக்க முடியாது. சமுதாயத்தில் வலுவிழந்த மாணவர்களின் நிலைக்கு இறங்கிவந்து, அவர்களை அந்நியப்படுத்தாது, அவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அவர்களை ஆற்றுப்படுத்தி, வாழ்வில் பிறருக்காக வாழும் மாண்புடைய மனிதர்களாய் உயர்த்துவதே, ஆசிரியர் ஆன்மீகத்தின் மூன்றாவது பரிமாணமாகும். இவ்வாறு, ஆசிரியரின் ஆன்மீகம் முப்பரிமாணம் கொண்டதாய் அமையும்போது, அவரது வாழ்வே (MEDIUM) மாணவ, மாணவியருக்கு வாழ்க்கைப் பாடமாக அமைகிறது (MESSAGE). காந்தி அடிகளின் கூற்றுப்படி, வாழ்வே நற்செய்தியாக அமைகிறது. ஆசிரியப் பணி ஆன்மீகப் பணியாக அமைந்து. அவரே ஒரு நற்செய்தியாகிறார்.

ஆசிரியப் பணி ஆன்மீகப் பணியாய் மலரட்டும், ஆசிரியர் ஒரு நற்செய்தியாய் மணம் பரப்பட்டும்.

Comment