No icon

அழகோவியமே!

எங்கள் அன்னை மரியே!

கன்னி மரியா கருவுற்று இயேசு என்னும் ஆண் மகவை பெற்றெடுத்து, அவருக்கு இம்மானுவேல் என்னும் பெயரிட்டு கடவுள் நம்மோடு குடிகொண்ட பெருவிழாவை அனைத்துக் கிறிஸ்தவர்களும் பெரும் கொண்டாட்டமாக ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் அன்று சிறப்பிக்கின்றனர். அதற்கு நிகராக அனைத்து கத்தோலிக்கர்களும், ஏன் பிரிந்த கிறிஸ்தவர்கள், மற்றும் ஏனைய மதத்தினரும் உணர்வுபூர்வமாக கொண்டாடும் மிகப்பெரும் பெருவிழா கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா தான். செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி!

மரியா - என்றால் என்ன?

மரியா, மரியம், மிரியம், மரியே என பல மொழிகளுக்கு ஏற்றவாறு ஒலிபெயர்ப்பு மாறினாலும், மரியா என்ற பெயருக்குதுளிக்கடல் (Droplet of sea) என்ற அர்த்தம் பொருந்துகிறது.

ஸ்டில்லா மாரிஸ் (Stila Maris) என்ற இந்த சொல்லின் பொருள் சற்று திரிந்து, ஸ்டெல்லா மாரிஸ் (Stella Maris) அதாவது வழிகாட்டும் விண்மீன் என மரியன்னையின் மேன்மையான பண்பான துன்பக்கடலில் தத்தளிப்பவர்களைக் கரை சேர்க்கும் குணத்தினை ஒத்துப் போகிறது.

கன்னி மரியாவின் பெயரினைவழிகாட்டும் விண்மீன்’, ‘ஊட்டமளிக்கும் கடவுளின் தாய்’, ‘முப்பொழுதும் கன்னி’, ‘விண்ணகத்தின் வாயில்என்றெல்லாம் விவரிக்கிறார் புனித ஜெரோம்.

தொடக்க நூற்றாண்டுகளில் கன்னி மரியாவின் புகழ்

புனித ஜெர்மானுஸ் எழுதுகையில் கன்னி மரியாவின் புகழை பின்வரும் பட்டங்களால் வாழ்த்துகிறார்.

வாழ்க, கடவுளின் தூய அரியணையே,

கடவுளின் கொடையே,

மாட்சிமையின் இல்லமே,

அழகு நிறை அணிகலனே,

தேர்ந்துகொள்ளப்பட்ட பொன்னகையே,

எல்லாப் புனிதர்களைவிடவும் புனிதமானவளே,

விண்ணகத்தைவிடவும் உயர்ந்தவளே,

கெருபீம்களைவிடவும் மாட்சி பொருந்தியவளே

சேராபீன்களைவிடவும் மதிப்புமிக்கவளே,

அனைத்து படைப்புகளைவிடவும் 

வணக்கத்துக்கும் உயர்வுக்கும் உரியவளே,

 உனது வாழ்வை காணிக்கையாக்கி,

ஆன்மீக வெள்ளத்தில் நாங்கள் அமிழ்ந்திட

காக்க வந்த ஒலிவக் கிளையே,

மீட்பு பிறந்தது எனும் பெருமகிழ்ச்சி செய்தியை

கொணர்ந்த வெண்புறாவே,

எங்கள் ஆன்மாவுக்கு இனிமை தரும்

கிறிஸ்து என்னும் மன்னாவை

பொதித்து வைத்த பொன்னாலான பாத்திரமே!”

கன்னி மரியாவின் புகழ்பாடும் விவிலிய உருவகங்கள்

. யாக்கோபின் ஏணி

தொடக்க நூலில் யாக்கோபு கண்ட கனவில் வானத்துக்கும், பூமிக்கும் இடையே நின்றுகொண்டிருந்த ஏணி ஒன்றில் வானதூதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தார்கள். கன்னி மரியாவை இந்த அழகிய ஏணியாக காட்சிப் படுத்திப் பார்ப்போம். இந்த பூமியை தொட்டுக் கொண்டிருக்கும் அந்த ஏணி, கன்னி மரியாவின் முழுமையான மனிதத்தன்மையை காட்டுகிறது.

வார்த்தையாம் கடவுளை தன் உதரத்தில் தாங்கிடஆம்என்று சொன்னதால், இறையுளத்திற்கு முழுமையாக தன்னை கையளித்து, சிலுவை வரை இயேசுவோடு உடன் பயணித்து முதல் சீடத்தியாகி, விண்ணகத்தின் வாயிலை அடைந்திடும் பேறுபெற்றதால் விண்ணகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் அழகிய ஏணியாக கன்னி மரியா திகழ்கிறார். இந்த ஏணி, கடவுளையே மண்ணுலகிற்கு அழைத்து வந்தது. மனித குலத்தையே விண்ணுலகிற்கு ஏற்றிச் செல்லும் கருவியாக உள்ளது.

இந்த ஏணியின் உச்சாணியில் நின்று இருகரம் விரித்து அழைப்பது இயேசு தான், ஆக, இயேசுவே இலக்கு. இந்த ஏணியின் படிகள் ஒவ்வொன்றிலும் இயேசுவின் விழுமியங்கள் பொதியப்பட்டுள்ளன. ஏணி முழுவதும் இயேசு நமக்களித்துவிட்டுச் சென்ற விழுமியங்கள் அன்புத்தீயால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

. எரியும் முட்புதர்

மோசே கடவுளின் பிரசன்னத்தை ஒரேபு மலையில் கண்டுகொள்ளும்போது, எரியும் முட்புதரின் காட்சியை காண்கிறார். அதன் அருகில் சென்று பார்க்க முற்படும்போது அவரது காலணிகளை கழற்றிவிட்டு நிற்கும்படியாக ஆண்டவரின் தூதரால் அறிவுறுத்தப்படுகிறார். தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தாலும், நெருப்பால் தீய்ந்து போகாத மாபெரும் காட்சியை விடுதலைப் பயண நூல் மூன்றாம் அதிகாரம் விவரிக்கிறது.

தீப்பிழம்பால் தீய்ந்து போகாத இறைப்பிரசன்னத்தால் பசுமையாக காட்சியளித்த முட்புதர் போல், கன்னி மரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைப்பிரசன்னத்தால் நிறைந்து என்றும் கன்னியாக திகழ்கிறார். ஆண்டவரின் தாயாக முழுவதுமாக தன்னையே அர்ப்பணித்த கன்னி மரியா, இம்மண்ணுலகோர் அனைவருக்கும் தாயாக, மண்ணக விண்ணக அரசியாக அதே ஆண்டவரால் முடிசூட்டப்படுகிறார்.

"அரிமத்தியா யோசேப்புவின் கல்லறையில் ஆண்டவர் இயேசு அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன் யாரையும் அதில் அடக்கம் செய்யவில்லை என விவிலியம் குறிப்பிடுகிறது. அதற்குப் பின்னரும் அதில் யாரையும் அடக்கம் செய்யவில்லை என வரலாறு சொல்லுகிறது. அதேபோல், இயேசுவின் உடலை தன் உதரத்தில் தாங்கிய கன்னி மரியா, இயேசுவை பெற்றெடுத்த பின்னரும் தம் கன்னிமையை காத்துக்கொள்ளும் பேற்றினை ஆண்டவரே அவருக்கு அளித்து என்றும் கன்னியாக காட்சியளிக்கிறார்" என்பார் புனித ஜெரோம்.

. வாழ்வின் மரம்

ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.” (தொ நூ 2:9)

புனித பவுலடியாரும் தமது மடல்களில் எவ்வாறு ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் பாவம் இவ்வுலகில் வந்ததோ, அது போல இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால், சிலுவை மரத்தில் தொங்கி இவ்வுலகிற்கு மீட்பு வந்ததென குறிப்பிடுகிறார்.

ஒரு மரத்தின் கனியிலிருந்து பாவம் இவ்வுலகை ஆட்கொண்டது போல, இன்னொரு மரத்தின் கனியினால் அந்தப் பாவத்திலிருந்து விடுதலை கிடைத்தது. அதுவே வாழ்வின் மரம். கன்னி மரியா தான் அந்த வாழ்வின் மரம். அவர் வயிற்றின் கனியாகிய இயேசு தான் பாவத்தால் நுழைந்த சாவிலிருந்து நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்கிறார்.

ஏதேன் தோட்டத்தில் நடப்பட்ட வாழ்வின் மரத்தை கன்னி மரியாவுக்கு உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது.

விடுதலை வேட்கையில் கன்னி மரியா

நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்என இறையுளத்திற்கு தலைவணங்கிய கன்னி மரியா, தன்னை உரிமைகள் இழந்த அடிமைப்பெண்ணாக பார்க்கவில்லை. மாறாக, இறைவனோடு உரையாடும், அவரது தூதரின் வார்த்தைகளை புரிந்துகொள்ள தன் மனதில் தோன்றும் கேள்விகளை உரிமையோடு எடுத்து வைக்கும் விடுதலைப் பெண்ணாகவே காட்சியளிக்கிறார். மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லும்போது தன்னந்தனி ஆளாக பல மைல்கள் கடந்து அவரை சந்திக்கச் சென்ற துணிவை நாம் எண்ணிப் பார்ப்போம். மூன்று மாத காலம், தான் கருவுற்றிருந்த நிலையிலும் தன் உறவினருக்கு உதவிடும் வண்ணம் அவரோடு தங்கி இருப்பதற்காக எடுத்த முடிவும் நிலைப்பாடும் போற்றுதலுக்குரியது.

ஒரு கண் இறையுளத்தை ஏற்றுக்கொள்ளும் பார்வையை வளர்த்துக்கொள்ள துடிக்கிறது. இன்னொரு கண் தேவையில் இருப்போரை தேடிச் சென்று உதவிட துடிக்கிறது.

இறைவார்த்தையை கன்னி மரியா ஏற்றுக் கொண்டதால் வார்த்தையாகிய இறைவன் அவர் உதரத்திலே உருவானார். உருவானவுடன் தன் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மரியா பாடல் இசைக்கிறார். ஏழ்மையும், வறுமையும், அதிகாரமின்மையும்,  சமூகத்தில் தாழ்நிலையில் இருந்த சூழலும் பாடலில் சேர்ந்தே ஒலிக்கிறது.

இத்தகைய விளிம்புநிலை சகோதர சகோதரிகளோடு கரம்பிடித்து பாடக்கூடிய பாடலில் சாமுவேலின் தாயான அன்னாவின் வார்த்தைகளை பாடினாலும், சமூகத்தின் பசித்தோர் - செல்வர், எளியோர் - செருக்குற்றோர், தாழ்நிலையில் உள்ளோர் - வலியோர் போன்ற பாகுபாடுகளை சமன் செய்யும் பாடலாக ஒலிப்பதை மறுக்க முடியாது என்கிறார் விடுதலை இறையியலார் லியனார்டோ பாஃப்.

கானாவூர் திருமணத்தில் இரசம் தீர்ந்து போன நிலையில் இக்கட்டான சூழலில் இருக்கும் வசதியில்லா குடும்பத்தினரோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். ஆண்டவர் இயேசுவிடம் சென்று வேண்டுகிறார். “எனது நேரம் இன்னும் வரவில்லைஎன்று இயேசு சொன்னாலும், திருமணப் பந்தியின் பணியாளர்களை சந்தித்து உரையாடுகிறார். தேவையை நிறைவு செய்திடஅவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்று பணிக்கிறார். இவ்வாறு இயேசு நிகழ்த்திய முதல் புதுமையின் கதாநாயகியாக கன்னி மரியாவே காட்சியளிக்கிறார்.

என்னே உன் அழகு !

இரக்கமே கடவுளின் முகம். அம்முகத்தின் அச்சுப் பதிப்பாக கன்னி மரியா திகழ்கிறார். "ஆண்டவர் தம் திருமுகத்தை உன் மேல் ஒளிரச்செய்து உன் மீது அருள் பொழிவாராக!" (எண் 6:25) என எண்ணிக்கை நூலில் வாசிப்பது போல அவரது திருவுளத்தை முழுவதுமாக ஏற்ற பாவ மாசு இல்லாத கன்னி மரியாவின் முகம் எத்துணை அழகானது என்பதை உருவகமாய் குறித்துக்காட்டிடும் இனிமைமிகு பாடலில்:

என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு” (1:15).

யாரிவள்! வைகறைபோல் தோற்றம்; திங்களைப் போல் அழகு; ஞாயிறுபோல் ஒளி; போரணி போல் வியப்பார்வம்; யாரிவள்!” (6:10)

ஆசீர்வாதம் மிக்க, அருள் பொழியக்கூடிய அவளது திருமுகத்தை அன்னைமரிப் பிரியர்கள் மட்டுமல்ல; எல்லா மக்களும் கண்டுகொள்ளவே அவரது திருத்தலத்தை நோக்கி படையடுத்துச் செல்கின்றனர். தினம் தினம் செபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன, செபமாலை சொல்லப்படுகிறது, நவநாள்கள் கொண்டாடப்படுகின்றன, பிறரன்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறாக இயேசுவின் இறையரசுக்கனவு அன்னை மரியா என்னும் ஒப்பில்லா தாய் வழியாக திரு அவையில் வளர்த்தெடுக்கப்படுகிறது.

இயேசுவின் மறையுடலாம் தாய் திரு அவையை தாயுள்ளத்தோடு பராமரிக்கும் கடமையும் பொறுப்பும் தாய் மரியாவுக்குத்தானே!

இயேசுவின் உடலை தம் கருவில் தாங்கிய அன்னை மரியாநம் எல்லாரையும் தொடர்ந்து தாங்கிட அவரது பரிந்துரையை நாடுவோம்!

Comment