Namvazhvu
Announcement உலக இளைஞர் நாள் சிலுவையை வழங்குதல்  நவம்பர் 22ம் தேதி நடைபெறும்
Monday, 06 Apr 2020 02:24 am
Namvazhvu

Namvazhvu

ஏப்ரல் 05 ஆம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய குருத்து ஞாயிறு திருப்பலியின் இறுதியில் ஆற்றிய மூவேளை செப உரையில், சமுதாய தொடர்பு சாதனங்கள் வழியாக, இத்திருப்பலியில் பங்குகொண்ட அனைத்து விசுவாசிகளையும் வாழ்த்தினார்.

மறைமாவட்ட இளைஞர் நாளில், இதுவரை இடம்பெறாத அளவில், இன்று உலகெங்கும் பங்குகொள்ளும் இளைஞர்களை, இன்று சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன் என்றும் திருத்தந்தை கூறினார்.

2019ம் ஆண்டில்உலக இளைஞர் நாள்சிறப்பிக்கப்பட்ட பானமா நாட்டு இளைஞர்கள், 2022ம் ஆண்டில் இந்தஉலக இளைஞர் நாள்சிறப்பிக்கப்படவுள்ள லிஸ்பன் நகர் இளைஞர்களுக்கு, ஏப்ரல் 05, ஞாயிறன்று, உலக இளைஞர் நாள் சிலுவையை வழங்க வேண்டியிருந்தது, இந்த முக்கியமான நிகழ்வு, வருகிற நவம்பர் 22ம் தேதி, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று இடம்பெறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.

இந்த நிகழ்வுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில், இளைஞர்கள், கொரோனா தொற்றுக் கிருமியின் இந்த இன்னலான நேரத்தில், நம் எல்லாருக்கும் தேவைப்படும், நம்பிக்கை, மனத்தாராளம், தோழமை ஆகியவற்றை உருவாக்கவும், அவற்றுக்குச் சான்றுகளாக வாழவும் வேண்டுமென திருத்தந்தை வலியுறுத்தினார்

வளர்ச்சி மற்றும் அமைதிக்காக விளையாட்டு உலக நாள்

வளர்ச்சி மற்றும் அமைதிக்காக விளையாட்டு உலக நாள், ஏப்ரல் 06, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்படுகின்றது, இந்நாள்களில், பல விளையாட்டு நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, இருந்தபோதிலும், எதிர்ப்பு உணர்வு, குழு உணர்வு, உடன்பிறந்த உணர்வு போன்ற விளையாட்டின் சிறந்த கனிகளை நம்மால் காண முடிகின்றது, எனவே, இந்த உலக நாளை மீண்டும் துவக்குவோம் என்று திருத்தந்தை கூறினார்.

இயேசு துன்புற்று, மரித்து, உயிர்த்ததை நினைவுகூரும் புனித வாரத்தை பயணத்தை, நம்பிக்கையில் மேற்கொள்ளுமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, திருவழிபாடுகளில் பங்குகொள்ள இயலாதவர்கள், வீடுகளில் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் செபத்தில் ஒன்றுகூடுமாறு கூறினார்.

கோவிட்-19 கிருமி நோயாளிகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், அவர்களுக்காக தங்களையே தியாகம் செய்யும் அனைவரோடும், ஆன்மீக முறையில் மிக நெருக்கமாக ஒன்றித்திருப்போம், அவர்கள் ஒவ்வொருவரும் என் மனதிலும், நினைவிலும் இருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, பாஸ்கா விசுவாச ஒளியில் இறந்தவர்களுக்காகச் செபிப்போம் என்றும் கூறினார்

இறுதியில், உயிர்ப்பின் மகிமைக்கு நம்மை இட்டுச் செல்லும், சிலுவையின் பாதையில் இயேசுவைப் பின்செல்ல அன்னை மரியாவிடம் செபிப்போம் என்று கூறி, மூவேளை செப உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.