மரியாவின் மாசற்ற இதயம்
உலகிலேயே பாசம் நிறைந்தது ஓர் அன்னையின் இதயம் என்றால் அது மிகையாகாது. ஒவ்வோர் அன்னையும் தனது இதய அன்பை தம் பிள்ளைகளுக்கும் தமக்கு வேண்டிய நண்பர்களுக்கும் மட்டும் வெளிப்படுத்துவார். தான் மிகவும் அன்பு செய்பவர்களை ’நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்று ஒவ்வோர் அன்னையும் காட்டுவதைப்போல அன்னை மரியாவும் நமக்குத் தன் இதயத்தைக் காட்டுகிறார். அன்னை மரியா, இதயத்தில் பரிவும் பாசமும் இறைப்பற்றும் மாசில்லாத் தூய்மையும் நிறைந்தவர். அவருடைய இதயத்திலிருந்து ஒளி, அன்பு, இரக்கத்தின் ஊற்று ஆகியவை நம்மை நோக்கி வருகின்றன.
மரியாவின் மாசற்ற இதய பக்தி முயற்சி
கன்னி மரியாவின் தூய இயல்பு மற்றும் அன்பு மூவொரு கடவுளின் திட்டத்திலும் மனித குல மீட்பிலும் மரியாவின் ஆவல் மற்றும் பங்கைத் தியானிக்க உதவும் பக்தி முயற்சிதான் மரியாவின் மாசற்ற இதய பக்தி முயற்சி ஆகும். இயேசுவின் இதயமும் அன்னை மரியாவின் இதயமும் கல்வாரியில் ஒன்றிணைந்தன. "மரியாவின் மாசற்ற இதயம்" என்று பாத்திமா காட்சிகளுக்குப் பின்னர் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு இது "மரியாவின் தூய இதயம்" என்று அழைக்கப்பட்டது.
வரலாற்றுப் பின்னணி
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித மெக்தில்து, புனித. ஜெர்த்ரூத் ஆகியோர் மரியாவின் இதயத்தின் மீதான பக்தியை முதலில் கடைப்பிடித்தனர். 15 ஆம் நூற்றாண்டில் சியன்றை புனித பெர்னார்தினோ கன்னி மரியாவின் இதயம் குறித்த சிந்தனையை உருவாக்கினார். 17 ஆம் நூற்றாண்டில் புனித ஜான் யூட்ஸ் எழுதிய ’அதிசயமான இதயம்’ என்ற நூலின் விளைவாக 1648ல் பிரான்ஸ் நாட்டின் அட்டூன் நகரில் மரியாவின் இதயத்தின் விழா முதன் முதலில் சிறப்பிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே, பிரான்ஸ் நாடு முழுவதும் இந்த விழா பரவியது. 1799ல் இத்தாலி நாட்டில் பலர்மேவு மறைமாவட்டத்தில் மரியாவின் மிகத்தூய இதய விழாவைக் கொண்டாட திருத்தந்தை 6 ஆம் பயஸ் அனுமதி அளித்தார். 1855 ஆம் ஆண்டில் திருப்பலி, திருப்புகழ்மாலை ஜெபத்திற்கு உரோமின் திருவழிபாட்டுப் பேராயம் அங்கீகாரம் வழங்கியது. 1944ல் திருத்தந்தை 12 ஆம் பயஸ் மரியாவின் மாசற்ற இதயவிழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். இந்த பக்தி முயற்சி 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இவர்தான் இவ்விழாவை இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்கு அடுத்து வரும் சனிக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாட உத்தரவிட்டார்.
பாத்திமா காட்சி
1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமாவில் காட்சி கொடுத்த பிறகு இந்த பக்தி முயற்சி சிறப்பாக வளர்ந்தது. 1917 ஜூன் 13 ஆம் தேதி புதன்
கிழமை காட்சியில், மரியன்னை யின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டார். லூசியாவிடம், அன்னை மரியா, "நீ இன்னும் கொஞ்ச காலம் இங்கு இருக்க வேண்டும்; என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி உன்னை
பயன்படுத்த இயேசு விரும்புகி றார். உலகில் என் மாசற்ற இதயப் பக்தியை ஏற்படுத்தி, இப்பக்தியைக் கைக்கொள்ளும் அனைவருக்கும் நான் மீட்பை வாக்களிக்கிறேன். என் மாசற்ற இதயம் உன் அடைக்கலமாகவும் கடவுளிடம் உன்னை அழைத்துச் செல்ல வழியாகவும் இருக்கும்" என்று கூறினார். அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது. மாதா வின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித் துளைக்கப் படுவதாகத் தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின் பாவங் களால் நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற மரியன்னையின் தூய இதயம்தான் அது. அன்னை மீண்டும் அவர்களிடம், ’ஏதா வது சிறு சிறு ஒறுத்தல்கள் செய்யும்போது, "ஓ! இயேசுவே! உமது அன்பிற்காகவும் பாவிகள் மனந்திரும்புவதற்காகவும் மரியன்னையின் தூய இதயத் திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப் படும் பாவங்களுக்குப் பரிகாரமாக வும் இதைச் செய்கிறேன்" என்று சொல்லும்படி கூறினார்.
அடுத்து, ரஷ்யாவை தம் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்
கொடுக்கவும் கேட்டுக்
கொண்டார். இந்த நிகழ்வு நடந்த போது சில ஆண்டுகளுக்குப் பிறகு அருட்பணி. ஸ்தெபனோ கோபியிடம் அன்னை மரியா பேசும்போது, "தன் மாசற்ற இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும் அடைக்கலமாகவும் பாதுகாப்பாகவும் தன் இதயம் எப்போதும் இருப்பதாகவும் தங்களையே அர்ப்பணிக்கவும் கூறினார்.
திருவிவிலியத்தில் அன்னையின் மாசற்ற இதயம்
அன்னை மரியாவின் மாசற்ற இதயம் குறித்து லூக்கா நற்செய்தியில் 2 ஆம் அதிகாரம் 19 ஆம் திருவசனம் இவ்வாறு கூறுகிறது. "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்றும் 51 ஆம் இறைவார்த்தையில் "பின்பு, அவர் அவர்களுடன் சென்று, நாசரேத்தை அடைந்து, அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லூக்கா நற்செய்தியில் அதிகாரம் 2, 35 ஆம் இறைவார்த்தை இவ்வாறு கூறுகிறது; "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப்பாயும்". அன்னை மரியா இயேசுவைப்பற்றியும் அவருடைய மீட்பின் திட்டத்தைக் குறித்தும் எப்போதும் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்தார்கள். அந்த இதயம் துன்பங்களையும், அவமானங்களையும் சந்திக்கின்ற இதயமாக துன்புற்ற இந்த மானிட சமுதாயம் மீது இரக்கம் கொண்ட இதயமாக, நமது வாழ்வைத் தூயதாக்கி இறைத்திருவுளமான மீட்பின் திட்டத்தில் பங்குகொண்டு நடத்திச் செல்லும் அன்பு இதயமாக இருக்கிறது.
தியாக அன்பில் நிறைந்த இதயம்
மீட்பின் திட்டத்தை உள்ளத்
தில் சிந்தித்துப் பார்த்தும் அதை நிறைவேற்றத் தன்னுடைய வாழ்வு முழுவதையும் இறைவனுக்கு அர்ப் பணித்தார் அல்லது தன்னையே தியாகம் செய்து, தன் மகனைத் தியாகப் பலியாக ஒப்புக் கொடுத்தார். கல்வாரியில் இயேசுவின் இதயமும் அன்னை மரியாவின் இதயமும் ஒன்றிணைகிறது. கல்வாரியில் இருந்து அன்னை மரியா நம் அனைவரையும் பெற்றெடுக்கிறார். மனிதருக்கு அருள்வாழ்வைத் திரும்பப் பெற்றுத்தர கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, பற்றி எரியும் தியாக அன்பு என்பவற்றால் நிரம்பி வழிந்த இரக்கத்தின் ஊற்றாக, தியாக இதயமாக அன்னையின் இதயம் இறைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கியது. அன்னையின் ஒத் துழைப்பு இல்லையென்றால் நாம் மீட்பு பெற்றிருக்க முடியாது.
அன்னையின் இதயம் மாசற்றது
ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வு வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன் நியமிக்கப்பட்டவரின் இசைவு பெற வேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார். இறை அன்னை முற்றிலும் தூயவர், பாவக்கறை ஏதுமில்லாதவர். தூய ஆவியினால் புதிய படைப்பாக உருவாக்கப்பெற்றவர் என்று அவரை அழைக்கும் வழக்கம் திருஅவைத் தந்தையர்களிடம் நிலவியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. கருவான முதல் நொடியிலிருந்தே தனிச்சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர் "அருள்நிறைந்தவரே வாழ்க!" என்று வாழ்த்துகின்றார். மரியா கடவுளின் வாக்குக்கு இசைவு அளித்ததால் இயேசுவின் தாயானார். இதனை இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவை ஏடு 56ல் மரியா கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியல்ல மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிந்து பேசும் அன்னையின் இதயம்
கானாவூர் திருமண விருந்தில் அன்னை மரியா மணமக்களின் மாண்பைக் காப்பதற்கும், திருமண வீட்டாரின் மகிழ்ச்சி எந்தவகையிலும் குறைந்து போய்விடக்கூடாது என்பதற்காகவும் (யோவான் 2:1-11) இறுதியாகப் பந்தியமர்த்தப்படும் ஏழைமக்களுக்குச் சுவையான திராட்சை இரசம் இல்லாமல் போய்விடக் கூடாது என்று தனது இதயமானது ஏழைகளின் நலனில், மனித மாண்பில் அக்கறைகொண்டு இயேசுவிடம் பரிந்து பேசி சுவையுள்ள, மகிழ்ச்சியைத் தரக்கூடிய திராட்சை இரசத்தைத் தம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இதயமாக அன்னை மரியாவின் இதயம் இங்கு நமக்குத் தெரிகிறது.
அடைக்கலம் தரும் அன்னை மரியாவின் இதயம்
"முன்பகையின்றி, தவறுதலாகத் தன் தோழனைக் கொன்றுவிட்ட எவனும், இந்த நகர்கள் ஒன்றினுள் ஓடிப்புகுந்து அடைக்கலம் பெற்று உயிர்தப்புமாறு அந்நகர்களைக் குறித்தார் என்று இணைச்சட்டம் 4:42ல் தஞ்சம் புகுந்துகொண்டு உயிர்வாழ அடைக்கல நகர்கள் உருவாக்கப்பட்டதுபோல இன்று அன்னையின் இதயம் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தஞ்சம் புகுந்து அடைக்கலம் புகும் இதயமாக இருக்கிறது. அன்னையின் இதயம் தூய ஆவியானவரின் சரணாலயமாக இருக்கிறது. என்னுடைய இதயம் ஒளியில் பற்றி எரிந்து கொண்டு ஆன்மாக்களை பாவத்திலிருந்து மீட்டு இயேசுவோடு இணைப்பதற்கும் வழி தவறிச்செல்லும் ஆன் மாக்களுக்கு மகத்தான ஒளியைக்காட்டி ஒளியாம் இறைவனோடு இணையவும் வழி காட்டுகிறது. இந்த உலகில் சாத்தானிடம் இருந்து போராடி, வெற்றிபெற்று, ஒளியின் மக்களாக அன்னை மரியாவின் இதயத்தில் தஞ்சம் அடைவோம். நமது ஆன்மிகப் போரில் மாதாவின் இதயம் நம்மை மறைத்துவைத்து சாத்தானிடம் இருந்து காப்பாற்றும்.
அன்னை மரியாவின் இதயத்தைக் குத்திக் கிழிக்கிறோமா? அலங்கரிக்கிறோமா?
அன்று பாத்திமா காட்சியில், மாதாவின் இதயம் முட்களால் குத்தித் துளைக்கப்படுவதாக தனது இதயத்தைத் தனது உள்ளங்கையில் ஏந்தி நமக்கு
வெளிப்படுத்தினார்கள். ஆம் இன்று நாம் நமது பெற்றோர்களை மதிக்காமல் வாழும்போது நமது அன்னையின் மாசற்ற இதயம் குத்திக் கிழிக்கப் படுகிறது.
ஒவ்வொரு நாளும் நமக்காகப் பலியான இயேசுவின் திருப்பலியில் முழுமையாக பங்கேற்
காமல் இருப்பதும் உதாசீனமாகவும், நேரங்கடந்து
திருப்பலிக்கு செல்வதும், திருப்பலி நேரத்தில் நண்பர்களுடன் ஆலயத்திற்கு வெளியில் நின்று பேசிக்கொண்டும், அலைபேசியுடன் உறவாடிக் கொண்டிருப்பதும் அன்னையின் இதயம் குத்திக் கிழிக்கப்படுவதற்கு காரணங்களாகின்றன.
பிறருடைய மனத்தைப் புண்படுத்தும்போதும், அவர்களைப் பற்றித் தவறாகப் பேசி அவர்களது இதயத்தைக் காயப்படுத்தும்போதும் அன்னை மரியாவின் இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது.
தீய பழக்க வழக்கங்கள், மதுபோதை போன்றவைகளுக்கு அடிமையாகியும், பெண்களின் வாழ்க்கையை கெடுக்கும்போதும் அன்னை மரியா
வின் இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது. குருக்களை யும், கன்னியர்களையும் தாறுமாறாகப் பேசும்போது அன்னையின் இதயம் கிழிக்கப்படுகிறது. நாம் நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அன்னையின் இதயத்தில் தஞ்சம் அடைவோம். எல்லாத் தவறுகளுக்கும் பாவங்களுக்கும் மனம் வருந்தி மன்னிப்பு ஒப்புரவு அருட்சாதனம் மூலம் பெற்று மாசற்ற வாழ்வு வாழ்வோம். அன்னை மரியாவின் இதயத்தை ஆணிகளால் குத்திக் கிழிக்காமல் மலர்களால் அலங்கரித்து, தான் செய்த தவற்றை விட்டுவிட்டு ஒரு குழந்தை எப்படி தன் அன்னையின் இதயத்திற்கு ஏற்ற குழந்தையாக மாறுகிறதோ அதேபோல நாமும் மாறுவோம். அன்னை மரியாவின் இதயம் நமக்கு அன்பும் மீட்பும் தரும். அன்னை மரியாவின் இதயத்தில் தஞ்சம் புகுவது ஒன்றே நமது வாழ்வின் வெற்றி ஆகும். அநேக ஆன்மாக்கள் நரகத்திற்கு செல்லாமல் மீட்புப் பெற அன்னை மரியாவிடம் அவர்களுக்காக பரித்தியாகம் செய்து செபிப்போம். மரியாவின் மாசற்ற இருதயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மரியே வாழ்க!