Namvazhvu
மையப்பொருள்: நம்பிக்கை அன்பியக் கூட்டம் - 134
Monday, 24 Jun 2019 12:21 pm

Namvazhvu

பாடல் : "நம்பிக்கைச் சின்னம் ஒளிர்கின்றது - அதை நம்பினோர் வாழ்வு மிளிர்கின்றது".
தொடக்க வேண்டல்: நம்பிக்கை என்னும் சுடரை நாங்கள் நங்கூரமாகக் கொண்டு நடைபோட எங்களை அழைக்கும் வானகத் தந்தையே இறைவா, வார்த்தை மானிடரான இயேசுவே இறைவா, வழிகாட்டி ஒளியூட்டும் தூய ஆவியே இறைவா உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம்; வாழ்த்தி வணங்குகின்றோம். இதோ உம் திருமுன்னிலையில் எங்கள் ............................ அன்பியக் கூட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். இதில் நாங்கள் ’நம்பிக்கை’ என்ற மேலான நற்செய்திப் பண்பு குறித்து கலந்துரையாடி, அனுபவங்களைப் பகிர்ந்து, பயனுள்ள செயல்திட்டங்களைத் தீட்டி, எம் அன்பியப் பயணத்தை அரிய வரலாறாக மாற்ற விரும்புகிறோம். நீர் உமது தொடர் உடனிருப்பில் எம்மை நிரப்பி, இயல்பாக இதில் ஏற்படும் ஐயங்களையெல்லாம் அகற்றி, நாங்கள் நம்பிக்கையின் நாயகர்களாகத் திகழ வழிகாட்டும். குறிப்பாக நாங்கள் ஆர்வத்துடன் மேற்கொள்ள விரும்பும் உமது ஆட்சிப் பணிக்கு நீரே ஆற்றலைக் கொடுத்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
இறைவார்த்தை: யோவான் 20: 19-31
(இறைவார்த்தைப் பகிர்தலுக்கு உதவியாக
ஒரு நிகழ்வு)
சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஓர் அருங்கொடை மாநாடு நடைபெற்றது. அதில் ஐரோப்பிய, ஆசியக் கண்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் உடல்நலம் பெற்ற பலர் சாட்சியம் பகர்ந்தனர். அதில் ஒருவர் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். அவர் சில ஆண்டுகளுக்கு முன் கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்டவர். அவர் தனக்கு கால்கள் நலம்பெறும் வாய்ப்பு இந்த அருங்கொடை மாநாட்டில் கிடைக்கும் என நம்பினார். அதோடு மட்டுமல்ல இந்த மாநாட்டுக்கு வரும்போது சில ஆண்டுகளாக கால்களில் ஷூக்கள் அணிய முடியாத நிலையில் இருந்த அவர் மிகுந்த நம்பிக்கையோடு ஒரு சோடி ஷூக்களை புதிதாக வாங்கி வந்தார். என்ன வியப்பு?! அவர் நம்பியபடியே அவரது கால்கள் நலமடைந்தன. அவர் அந்த ஷூக்களை அணிந்துகொண்டு, நடந்துகொண்டே சாட்சியம் பகர்ந்தார்.
சிந்தனை:
 நம்பிக்கைபற்றி எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 11ஆம் அதிகாரம் விரிவாகக் கூறுகிறது.
 நம்பாமல் கெடுவதைவிட நம்பிக்கெடுவோர் அதிகம் என அனுபவம் பகிரப்படும் உலகில் நாம் வாழ்கிறோம்.எனவே சூழலுக்கேற்ப முன்மதி யுடன் முடிவெடுக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
 ’அஞ்சுவ தஞ்சாமை பேதமை’ என்ற திருக்குறளை மாற்றி நம்புவ நம்பாமை பேதமை எனவும் கொள்ளலாம்.
’நம்பிக்கைதான் விளக்கு - அறிவுக் கண் இழந்த நமக்கு’
 நம்புவது சோதிப்பதன் அடிப்படையில் அமைவது நல்லதல்ல.
 நிரூபணம் ஆவது வரை நம்பிக்கையை ஏற்றுக் கொள்வது கடினம்
 அரும் அடையாளங்கள் (புதுமைகள்) அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன.
 ’கண்டு நம்புவதைவிட காணாமலேயே நம்புவோர்’ பேறுபெற்றோர்’ என இயேசு கூறுகிறார்.
 விஷ நம்பிக்கை, நிச நம்பிக்கைக்கு எதிரானது (எ.கா) ஒரு மிருகக்காட்சி சாலைக்குள் தடையை மீறி, ஆண்டவர் காப்பார் என்று நம்பிக் குதித்தவனை மிருகங்கள் கொன்று தின்றுவிட்டன என்பதை உலகம் அறியும்.
நம்பிக்கையாளருக்கான மன்றாட்டுகள்
1. திருஅவையின் பணியாளர்கள் நம்பிக்கைக்குரிய நற்சாட்சிகளாகத் திகழும்படியாக...
2. நாட்டுப் பணியாளர்கள் தங்களை நம்பி வாக்களித்த மக்கள் மற்றும் பொறுப்பளித்தவர்களுக்குத் துரோகம் செய்யாமல் செயல்பட...
3. அன்பியத்தில் நம்பிக்கை பெற்ற வெற்றி அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ளும்படியாக...
4. குடும்பங்களில் நம்பிக்கையே அச்சாணியாகத் திகழ...
திருப்பாடல்: 11:1-7
பரிந்துரைக்கப்படும் செயல்திட்டங்கள்:
1. என்ன துன்பம் வந்தாலும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்குத் துரோகம் செய்யாமல் நிறைவேற்று தல் (காண். திபா 15:4)
2. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை குழுவாக அணுகி விளக்கம் கோருதல்.
நிறைவு வேண்டல்:
நம்பிக்கையின் ஊற்றே இறைவா, இன்றைய கூட்டத்தில் நாங்கள் பெற்ற விழிப்புணர்வின் வழியாக நன்னம்பிக்கைக்கு நாங்கள் சாட்சிகளாகத் திகழ உறுதி ஏற்றுள்ளோம். எங்களுக்கு யாரும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமலும் நாங்களும் எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமலும் துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை வாழ்வாக்க உமது அருட்கொடைகளை எமக்குப் பொழிந்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.