Namvazhvu
குழந்தைப் பேற்றினால் பெருமளவில் பெண்கள் உயிரிழப்பு!
Wednesday, 03 Apr 2024 11:38 am
Namvazhvu

Namvazhvu

.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கேப்ரியல் காசியா அவர்கள், பெண்களின் சமுதாய நிலை குறித்து .நா. அவையின் 68-வது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரத்தையும் மதிப்பதற்கான ஒப்பந்தங்களை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இன்னும் சில நாடுகளில் பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாகவும், வன்முறைக்கும், உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்படுவதுடன், படிப்பதற்கும், வேலை செய்வதற்கும், நல ஆதரவுப் பணிகளைப் பெறுவதற்குமான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். உலகில் பத்து பெண்களுக்கு ஒருவர் மிகவும் ஏழ்மை நிலையில் வாடுவதாகவும், இவர்களின் ஏழ்மையை அகற்றுவதற்கான பாதையில் நாம் வெற்றி காணவில்லை எனவும் தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.

உலகில் ஒவ்வொரு நாளும் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு தொடர்புடையவைகளில் 800 பெண்கள் இக்காலத்திலும் உயிரிழந்து வருவதையும் பேராயர் சுட்டிக்காட்டினார். பொருளாதார ஆதரவு மற்றும் சமூக ஆதரவு இன்மையால் பல பெண்கள் தங்கள் குழந்தையைக் கருவிலேயே கலைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என எண்ணுவதாகப் பேராயர் காசியா தெரிவித்தார்.