திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் நற்செய்தியில் மிக அற்புதமான ஒரு நிகழ்வை நாம் காண்கிறோம். திருமுழுக்கு யோவான் தன் சீடருள் இருவருக்கு ஆண்டவர் இயேசுவை மெசியா என்று அறிமுகப்படுத்துகிறார். அந்த இரு சீடர்களில் ஒருவர் பெயர் அந்திரேயா. அந்த அந்திரேயா தம் சகோதரரான சீமோன் பேதுருவுக்கு மெசியாவை அறிமுகம் செய்து வைக்கிறார். இவ்வாறு ஒருவர் பெற்ற இறையனுபவம் ஒருவரோடு நின்று போக வேண்டிய ஒன்று அல்ல; மாறாக, அது கடந்து கொண்டே இருக்க வேண்டிய ஒன்று என்பதைத்தான் இன்றைய நாளின் இறைவார்த்தையில் நாம் காண்கின்றோம். நாம் சுவைத்த ஆண்டவரின் அன்பைப் பிறரும் சுவைக்க நாம் உதவி புரிய வேண்டும். மத்தேயு, தான் மட்டும் ஆண்டவர் இயேசுவின் அன்பைச் சுவைத்ததோடு நின்று விடாமல், தம்மோடு இருந்த அனைவரையும் அழைத்துச் சென்று ஆண்டவர் இயேசுவைச் சந்திக்க வைத்தது போல நாமும் நம்மால் முடிந்த அளவு நம் குடும்பத்தை, பிறரை ஆண்டவர் இயேசுவைச் சந்திக்க ஆண்டவர் இயேசுவின் அன்பை அனுபவிக்க அழைத்து வரக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் இஞ்ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் சாமுவேலை மூன்று முறை அழைக்கிறார். எப்பொழுது ஆண்டவரின் குரலைக் கண்டு கொண்டாரோ, அன்றிலிருந்து ஆண்டவர் சாமுவேலைப் பாதுகாத்தார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இந்த உடலை நாம் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறோம். இது தூய ஆவி தங்கும் ஆலயம். எனவே, நமது உடலைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
● எங்கள் அன்புத் தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தாங்கள் பெற்றுக்கொண்ட இறையனுபவங்களைப் பிறரோடு பகிர்ந்து வாழ்ந்திட இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எங்களை கண்மணி போல காப்பவரே! எங்களை வழிநடத்த நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டுத் தலைவர்கள், தாங்கள் மக்களுக்கான பணியாளர்கள் என்பதை உணர்ந்து பணியாற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எங்களைப் படைத்தவரே! நீர் தந்திருக்கும் உடலானது தூய ஆவி தங்கும் ஆலயம் என்பதை உணர்ந்து, எமது உடலின் மூலமாக உம்மை மாட்சிப்படுத்தவும், புனிதமாக இதைப் பேணிப் பாதுகாக்கவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● நலம் பல புரிபவரே! உடல், உள்ள நோயால் துன்புறும் மக்கள் மீதும் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்களுக்கு நீரே நலமளிக்கும் மருந்தாய் இருந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.