திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இடையர்கள்தான் முதன் முதலில் ஆண்டவர் இயேசுவைக் கண்டு மகிழ்ந்தவர்கள். அவர்களுக்குப் பிறகுதான் மூன்று ஞானிகளும் இந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால், இடையர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டதை விழாவாகக் கொண்டாடாமல், எதற்காக இந்த மூன்று ஞானிகள் ஆண்டவர் இயேசுவைக் கண்டதைத் திருக்காட்சிப் பெருவிழா என்று நாம் கொண்டாடுகின்றோம் என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழலாம். இடையர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் யூத இனத்தில் பிறந்திருக்கும் ஆண்டவர் இயேசுவைக் கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால், ஞானிகள் யூதர்கள் அல்லர்; யூதர்கள் வாக்களிக்கப்பட்ட மெசியா தங்கள் யூத இனத்திற்காக மட்டுமே வருவார் என்ற எண்ணத்தோடு இருந்தனர். ஆனால், ஞானிகள் ஆண்டவர் இயேசுவைக் கண்டதன் மூலமாக இவர் ஓர் இனத்திற்காக மட்டும் வந்தவர் அல்ல; மாறாக, உலகில் உள்ள ஒட்டுமொத்த மனித இனத்திற்காகவும் வந்தவர் என்ற உண்மையானது இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. எனவேதான், இவ்விழாவினை நாம் திருக்காட்சிப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இன்று நமக்கான திருக்காட்சிப் பெருவிழா, அடுத்தவரில் ஆண்டவரைக் காண்பது என்பதை உணர்ந்தவர்களாய் இப்பெருவிழாத் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை
‘ஒளியிழந்து, நம்பிக்கை இழந்து இருளில் வாழ்ந்த மக்களுக்கு, எருசலேமில் இருந்து உன்னத ஒளி ஒன்று தோன்றும். அந்த ஒளி அனைத்து மக்களுக்குமான ஒளி’ என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு, அதன்படி நடக்கும் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள், பங்காளிகள் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
● அருமை நேசரே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் தங்களது சொந்த மக்களுக்காக மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் எல்லா மக்களுக்காகவும் பணியாற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● ஒற்றுமையின் ஆண்டவரே! எங்களை ஆளும் தலைவர்கள் தன் குடும்பம், தன் இனத்தைச் சேர்ந்த மக்கள், தம் மொழி பேசும் மக்கள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைவருக்காகவும் உழைத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● அரவணைப்பவரே இறைவா! எம் பங்கையும், பங்குத் தந்தையையும் நிறைவாக ஆசீர்வதியும். பங்கில் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, எவரையும் உதாசீனப்படுத்தாமல் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● அமைதியின் ஆண்டவரே! இவ்வுலகில் மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், நிறத்தின் பெயரால் பாகுபாடு பார்க்கும் நிலை நீங்கி, அனைவரையும் மனிதராக மதித்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.