Namvazhvu
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (03-12-2023) எசா 63: 16-17,64:1,3-8; 1கொரி 1: 3-9; மாற் 13: 33-37
Thursday, 30 Nov 2023 11:33 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். நம்பிக்கையோடு விழிப்பாய் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்க, இன்று நாம் அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தியிலே தம்முடைய இரண்டாம் வருகையைப் பற்றி எடுத்துரைக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, விழிப்பாய் இருக்கும்படி நம்மை அறிவுறுத்துகிறார். எவர் ஒருவர் விழிப்பாய் இருக்க முடியும்? நம்பிக்கைக்கொள்ள முடிந்த ஒருவரே விழிப்பாய் இருக்க முடியும். எவர் ஒருவர் விழிப்பாய் இருக்க முடியாது? நம்பிக்கைக்கொள்ள இயலாதவர் விழிப்பாய் இருக்க முடியாது. இதோ, தாம் சொன்னது போலவே ஆண்டவர் வருவார்; நமக்கான தீர்ப்பை வழங்குவார். எனவே, நல்லதொரு வாழ்வை வாழ வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விழிப்பாய் இருப்பார். இதோ, ஆண்டவர் தாம் சொன்னது போல வரவில்லை; அவர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று நம்பிக்கை இல்லாது வாழ்வோர் விழிப்பாய் இருக்க மாட்டார். எனவேதான் நம் ஆண்டவர் ‘விழிப்பாய் இருங்கள்’ அதாவது, ‘நம்பிக்கையோடு இருங்கள்’ என்றுரைக்கிறார். எனவே, ஆண்டவர் தாம் வாக்களித்தபடி வருவார்; நமக்கான தீர்ப்பை வழங்குவார் என்பதில் நம்பிக்கைக் கொண்டு நல்வாழ்வு வாழ்ந்திட இத்திருவருகைக் காலத்தில் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

‘ஆண்டவரே நீரே எங்கள் கடவுள்; நாங்கள் பாவம் செய்தோம்; நீர் மலைகளைப் பிளந்து வந்து எங்களை மீட்பீர் என்று நாங்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கின்றோம்’ என்று பரிதவிக்கும் இஸ்ரயேல் மக்களின் அழுகுரலைப் பற்றி எடுத்துரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

‘ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளின் நம்பிக்கைக்குரியவர்; அவர் சொன்னவாறு இறுதி நாளில் வெளிப்படுவார். அந்நாளில் அவரின் குறை சொல்லுக்கு ஆளாகாதவாறு காத்துக் கொள்ளுங்கள்’ என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

வாக்கு மாறாத கடவுளே! உமது திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள், உமது திருமகனின் இரண்டாம் வருகையின்போது உமது மந்தைகளுக்கு நிலைவாழ்வு பெற்றுத் தந்திடும் வகையில் அவர்களைத் தயார்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அனைத்தையும் அருள்பவரே! நாடுகளை ஆளும் தலைவர்கள், விழிப்பாக, கவனமாக இருந்து நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அருமை நேசரே! திருவருகைக் காலத்திலே உள் நுழைந்திருக்கும் நாங்கள் அனைவரும், நம்பிக்கையோடு உமது திருமகனின் வருகையை எதிர்பார்த்து, அதற்கேற்ப வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

நலன்கள் வழங்குபவரே! அன்று உம் திரு மகனின் வருகையினால் மக்கள் குணமடைந்தது போல, இன்று மாற்றுத்திறன்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உமது மக்கள், உமது வார்த்தையால் வலிமை பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.