இறை விருப்பம் நம் விருப்பமாகட்டும்!
நமது வாழ்வில், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், பெரும்பாலான பக்கங்களை ‘நமது’, ‘நான்’ போன்ற விருப்பங்களே இடம்பிடிக்கின்றன. நாம் சந்தித்தத் தோல்வியின் பக்கங்களை ஆராய்ந்தாலும், நமது விருப்பங்களுக்கு நாம் கொடுத்த அதீத முக்கியத்துவங்களே காரணமாக அமையும். இறை விருப்பத்தை ஒதுக்கி, நமது விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இறுதியில் தோல்வியே மிஞ்சும் என்பதற்கு விவிலியத்தில் பல நிகழ்வுகள் உள்ளன.
இறைவனின் விருப்பத்துக்குத் தங்கள் இதயத்தைத் திறக்காததினால் பாவம் செய்து, கடவுளின் சினத்துக்கு ஆளாகி, நம்பிக்கை இழந்தனர் முதல் பெற்றோர் (தொநூ 3). எனவே, அழியாமையுடன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனித இனம் அழிவுக்குட்பட்டது. எரேமியா உரைத்த கடவுளின் வாக்கைவிட, மக்களின் விருப்பமே தனக்கு முக்கியமாகத் தோன்றியதினால் செதேக்கியா அரசரும், மக்களும் கல்தேயரின் கையில் ஒப்படைக்கப்பட்டு, அரசனது மாளிகையும், மக்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்பது விவிலியம் எடுத்துரைக்கும் வரலாறு (எரே 36-39). அதே வேளையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அன்னை மரியாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ‘ஆகட்டும்’ எனக் கூறி ஏற்றுக்கொள்கிறார். சமூகத்தில் நிலவிய கடும் எதிர்ப்புகள் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு மத்தியில், இறைவனின் விருப்பத்தைத் தன் விருப்பமாக மாற்றிக்கொண்டார். அவரது முழு வாழ்க்கையும் கடவுளின் திருவுளத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது.
இறைவனது விருப்பம் நம் விருப்பமாக மாறும்போது, நாம் மகிழ்வாக இவ்வுலகில் வாழ முடியும். இறைவனின் விருப்பம் நம் விருப்பமாக மாறாதபோது அங்கே பாவம் நுழைகிறது (முதல் பெற்றோர்). ஆண்டின் பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு, இறைவனின் விருப்பத்திற்கு முதன்மை இடம் கொடுத்து வாழ நம்மை அழைக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகம் இரு மகன்களைப் பற்றிய ஓர் உவமையை நம்முன் வைக்கிறது. இந்த உவமைக்கு ‘இரு புதல்வர்கள் உவமை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விவிலியப் பேராசிரியரான William Oarclay என்பவர் இந்த உவமைக்கு ‘The Better of Two Bad Sons’ அதாவது, ‘இரு மோசமான மகன்களில் சிறந்தவர்’ என்ற தலைப்பைத் தந்துள்ளார். இயேசு கூறும் இந்த உவமையில், நாம் சந்திக்கும் இருவருமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. மூத்த மகன் முதலில் தந்தையின் விருப்பத்தை மறுத்துவிட்டு, பின்னர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு நிறைவேற்றுகிறார். யூரிபிடஸ் (Euripides) என்ற மெய்யியலாளர், “இரண்டாம் எண்ணங்கள் எப்போதும் ஞானம் மிக்கவை” (Second Thoughts are Ever Wiser) என்கிறார். இளைய மகன் தந்தையின் விருப்பத்தை உடனே நிறை வேற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலைக் கயிறாகத் திரிப்பதாகவும் உறுதிகள் அளிக்கும் பலர் நம் நினைவுக்கு வருகின்றனர் (இன்றைய அரசியல் தலைவர்கள்!).
இரு புதல்வர்கள் பற்றிய இந்த உவமையைச் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இந்த நற்செய்தி வாசகத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. இயேசு எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த பின் கோவிலைத் தூய்மையாக்குகிறார் (மத் 21:12-17). அதனைத் தொடர்ந்து, மனம் திருந்தாத எருசலேமை அடையாளப்படுத்தும் விதமாக அத்தி மரத்தைச் சபிக்கின்றார் (மத் 21:18-22). இத்தகு செயல்களை இயேசு செய்வதற்கு அதிகாரம் எங்கிருந்து வந்தது எனத் தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். தலைவர்களின் கேள்விக்குப் பதிலாக, இயேசுவும் ‘யோவானுக்குத் திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்தில் இருந்தா? மனிதரிடமிருந்தா?” என எதிர்க்கேள்வி கேட்கிறார். இக்கேள்விக்கு அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை. ஏனெனில், அவர்கள் யோவானை நம்பவில்லை. எனவே, அவர்கள் ‘எங்களுக்குத் தெரியாது’ என்று பதிலுரைத்தார்கள் (மத் 21:23-27). இந்தப் பின்புலத்தில்தான் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டு, இரு புதல்வர்கள் உவமையைச் சொல்கிறார்.
யூதத் தலைவர்கள் தாங்கள் பெற்றிருந்த இறை அழைப்பைப் படிப்படியாக இழந்து வருவதை இயேசு சுட்டிக்காட்டத் தவறவில்லை. “கடவுள் உங்களுக்குத் தந்த வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டீர்கள். மனம் மாறுவதற்கான அழைப்பு பல முறை கொடுத்தபொழுதும், அதை ஏற்க மனமில்லாமல் எதிர்க்கத் துணிந்தீர்கள்” என்று இயேசு அவர்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தினார். ஆனால், அவர்களோ இயேசுவை எப்படி ஒழித்து விடலாம் எனத் திட்டம் தீட்டினர். நீதி நெறியைக் காட்ட அவர்களிடம் வந்த திருமுழுக்கு யோவானை நம்ப மறுத்தனர். பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் யாவரும் தங்களை நேரிய மனிதர்களாகக் காட்டிக்கொண்டனர். கடவுளின் கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுள்ள தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்தினர். தாங்கள் கோவிலில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய ‘நீதிமான்கள்’ என எண்ணி வந்தனர்.
இவர்கள் இளைய மகனைப் போல மக்கள் முன் நல்லவர்களாகக் காட்டிக்கொண்டாலும், அவர்கள் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், யூதச் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும், எளியவரும், வரிதண்டுவோர் மற்றும் விலைமகளிரும் இயேசுவின் போதனைகளையும், பணிகளையும் மூத்த மகனைப்போல முதலில் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், பின்னர் இறை விருப்பம் அறிந்து, தெளிந்து செயல்பட முன்வருகின்றனர். எனவே, இவர்கள்தாம் இறையாட்சிக்கு உட்படுவர் என்று இயேசு ஆணித்தரமாகச் சொல்கிறார்.
கடவுளின் விருப்பத்திற்கு முதலிடம் தந்து, மற்ற எல்லாப் பந்தங்களையும் துண்டித்துக்கொள்ளவும், மற்ற எல்லா ஆர்வங்களையும், தேவைகளையும் கூட பின்தள்ளவும் ஆயத்தமாகவுள்ள அனைவருமே உயர்ந்த விண்ணகக் குடும்பத்தின் பிள்ளைகள் என்பதில் புகழ் பெறுவர் என்கிறார் இயேசு (மத் 12:50).
எனவேதான், திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுளின் விருப்பம் என்பது அச்சப்பட வேண்டியதொன்றல்ல; மாறாக, அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அது கடவுளின் விலைமதிப்பற்ற ஒரு கொடை! இறைதந்தையின் விருப்பத்தைவிட, சிறந்த விருப்பம் வேறொன்றும் நமக்கில்லை” என்கிறார். (Medjugorje இல் நடந்த அனைத்துலக இளைஞர் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதன் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள திருத்தந்தையின் வாழ்த்து செய்தி - 27.07.2023).
இயேசுவின் மீது குற்றம் சுமத்தி, தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்ட யூத சமயத் தலைவர்களைப் போலவே, இஸ்ரயேல் மக்களும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு, கடவுளைக் குறைகூறும் செயலுக்கு, கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகத் தரும் பதிலிறுப்பே இன்றைய முதல் வாசகம் (எசே 18: 25-28).
எசேக்கியேல் இறைவாக்கினர் எரேமியாவின் சம காலத்தவர். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும், பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் வாழ்ந்தவர். தம் எருசலேம் நகர மக்களோடு பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர். தங்களது நகரமும், ஆலயமும் தகர்க்கப்பட்டதைக் கண்ணாலே கண்டவர். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கும், எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் இறைவாக்குரைக்க இறைவனால் அழைக்கப்பட்டவர்.
இறைவாக்கினர் எசேக்கியேலின் காலத்தில் நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், தங்களைத் தாக்கும் இன்றைய துன்பங்களுக்குக் காரணம், தங்கள் முன்னோர் செய்த பாவத்தின் விளைவு என்று எண்ணினர். இது தாங்கள் செய்த பாவத்திற்கான தண்டனை என அவர்கள் கருதவில்லை. காரணம், அக்கால மக்கள் தனிமனிதப் பொறுப்பை விட, குழுவின் பொறுப்பே பெரிது எனக் கருதினர் (ஆதாம் ஒரு தனி மனிதராகக் கருதப்படவில்லை. அவரது பாவம் அனைத்து மக்களையும் தாக்கியது!). எனவேதான் இறைவனின் வழி செம்மையற்றது, நேர்மையற்றது எனக் குறைபட்டுக் கொள்கின்றனர்; கடவுள் தங்களை அநீதியாக நடத்துகிறார் என்றும் முறையிடுகின்றனர்.
“உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?”, “என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!” என்று கூறி, பாவ வழியை விட்டுத் திரும்பி வர அழைப்பு விடுக்கின்றார் கடவுள். ஒவ்வொருவரின் செயல்களுக்கும் அவரவர் பொறுப்பு எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். “பொல்லார் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாக மாட்டார்கள்” என உறுதிப்பட உரைக்கின்றார். எல்லாரையும் நல்லவர்களாக மாற்றும் இறைவனின் முயற்சி எவ்வளவு நீதியானது! மேன்மையானது!
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தனது இதயத்திற்கு மிக நெருக்கமான பிலிப்பியத் திரு அவையில் (பிலி 1:7) நிலவும் பிரிவினைகளையும், சண்டை சச்சரவுகளையும் சுட்டிக்காட்டி, ஒருமனப்பட்டு வாழவேண்டும் எனில் தங்களிடம் காணப்படும் கட்சி மனப்பான்மையையும், வீண் பெருமையையும், தம்மைச் சார்ந்தவற்றில் மிதமிஞ்சிய அக்கறை கொள்ளும் நிலையிலிருந்தும் விலகி, மனத்தாழ்மையும், பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறையும், இயேசு கொண்டிருந்த மனநிலையையும் கைக்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குகின்றார்.
எனவே, இன்றைய மூன்று வாசகங்களிலும் இழையோடும் ஒரு செய்தி ‘இறை விருப்பம் நம் விருப்பமாகட்டும்’ என்பதுதான். தனக்கென வேறு வேலைகளும், விருப்பங்களும் இருந்தாலும், தந்தையின் விருப்பத்தைத் தேர்ந்து தெளிந்து, அதனை முதன்மையாக்கிய மூத்த மகனைப் போல, நமக்கென விருப்பங்கள், முதன்மைகள் இருந்தாலும், கடவுளின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டும். ‘இறை விருப்பத்தை நிறைவேற்றுதல்’ என்பது நமது சக்திக்கும் மேலான செயல்களைச் செய்து முடிக்க வேண்டியது போன்று மிகக் கடினமாக நாம் உணர்ந்தாலும், இப்பணியில் கடவுள் நம்முடன் இருப்பதாக நம்பிக்கை கொள்ள வேண்டும் (எகா: மோசே, யோசுவா, கிதியோன்). நமது விருப்பத்திற்குப் பதிலாகக் கடவுளின் திருவுளத்தை மையப்படுத்திய செயல்பாடுகளாக நமது செயல்பாடுகள் அமைய வேண்டுமெனில் ‘கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே’ நம்மில் இருக்க வேண்டும்.