Namvazhvu
இவர்களால் முடிந்ததென்றால்...! உருவு கண்டு எள்ளாதே!
Thursday, 28 Sep 2023 11:13 am
Namvazhvu

Namvazhvu

பலவித அடிப்படைகளில் இந்த உலகம் மிகவும் அழகானது. இந்த அழகான உலகை ஆண்டு அனுபவிக்க என, படைத்தவன் மனிதனுக்குக் கொடையாகக் கொடுத்தான். இலவசமாக வழங்கப்பட்டதாலோ என்னவோ, அதை இரசிக்கும் மனநிலையில் மனிதன் இல்லை. நாமோ உருவத்தில் ஒன்று போல் உள்ளவர்களாகத் தெரிந்தாலும், எண்ணத்தில், வார்த்தையில், மனநிலையில், செயலில் ஒன்றுபோல் உடையவர்கள் அல்லவே!

இயல்பு வாழ்க்கையில் பல முரண்பாடுகள் உடைய மக்களாக நாம் பிரிந்து காணப்படுகின்றோம். இந்த இயல்புகளின் வேறுபாடுகள் வெளிப்பார்வைக்கு அப்பட்டமாகத் தெரிவதில்லை. பேசும்போதும், உருவத்துக்கும் பொருந்தாத வேறுபாடுகளைப் பார்க்கின்றோம்.

நம்மிடையே பசுவின் தோலைப் போர்த்திக் கொண்டு நடமாடும் புலிகள் உண்டு. குள்ள நரியாகச் செயல்படுவோர் உண்டு. பார்ப்பவர்களை எல்லாம் வார்த்தையால் கொட்டும் தேள்கள் உண்டு. பிறரின் உயிரைப் பலிவாங்கும் பாம்புகள் உண்டு. ஓநாய், வெறி நாய், வேட்டை நாய், சொறிநாய்களுக்குப் பஞ்சமே இல்லை. அனைத்து மோசமான இயல்புடையோரும் நம் மத்தியில் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் அவரவர் வாழும் சொந்த வீடுகளுக்கு உள்ளேயும் உண்டு; வெளியேயும் உண்டு. ஆனால், இப்படிப்பட்டவர்களுக்கு நடுவிலும், விவேகமாகச் செயல்படத்தான் கடவுள் மனிதனுக்குள் உள்ளுணர்வுகளையும், சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும், விவேகத்தையும் வைத்துள்ளார். ஆனால், வெளி அலங்காரங்களையும், புறத்தோற்றத்தையும் பார்த்து ஏமாந்து போனவர்களும், இப்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருப்போரும் மிக மிக அதிகமே!

இனிப்பான வார்த்தைகளை நம்பி

                வாழ்க்கையைப் பறிகொடுத்தோர் உண்டு!

போலிக் கண்ணீரைக் கண்டு

                பணத்தைத் தொலைத்தோர் உண்டு!

சாகச நடிப்பை நம்பி

                சறுக்கிச் சாய்ந்தோர் உண்டு!

அழகைப் பார்த்து மதிமயங்கி

                அடிமையாக வாழ்வோர் உண்டு!

இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இதை வாசிக்கும்போது  நீங்களும், எழுதும்போது நானும் கூட யாரோ ஒருவரால் அல்லது பலரால், ஏதாவதோர் இடத்தில் ஏமாந்துபோயிருக்கின்றோமே என்பதை வெளியே சொல்லாவிட்டாலும், குறைந்தபட்சமாக மனதுக்குள்ளாகவாவது புலம்புவோம். எல்லோருடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற செயல்கள் நடந்திருக்கலாம் அல்லது நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு நடந்ததைப் பார்த்துப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எது நடந்தாலும் சிலர் கண்டுகொள்ளவே மாட்டார்கள்; சிலர் எச்சரிக்கை அடைவர்; சிலர் பாடம் கற்பர்; சிலர் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படுவர்; சிலர் மீண்டும் மீண்டும் ஏமாந்துகொண்டே இருப்பார்கள். ஏனெனில், ஏமாற்ற நினைப்போர் திட்டம் தீட்டி, புதுப்புது நுட்பத்தைப் பயன்படுத்தி, நம்பகத்தன்மையை நடிப்பில் புகுத்தி நூதனமான முறைகளைப் பயன்படுத்துவர்.

திருடுவோரும், கொள்ளையடிப்போரும் நூதனமான நுட்பங்களைக் கையாள்வது போல இவர்களும் பயன்படுத்துவார்கள்.

ஏமாற்றுவோரால் ஏமாற்றப்பட்டவர்களும், அனுபவப்பட்டவர்களும், சூடுபட்டவர்களும் அடிக்கடி பகிரும் வார்த்தைகள்தான் இவை. இந்த வாசகம் புதிது அல்ல; தொன்று தொட்டே பழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த ஒன்றுதான் இது. ஆனால், ஒருவர் ஏமாற்றப்பட்ட பிறகுதான், ஏமாந்து போனதைக் கண்டுபிடிக்கின்றார். இதற்குப் படித்தவனும் விதிவிலக்கல்ல; பாமரனும் விதிவிலக்கல்ல.

முன்பின் தெரிந்தவர்களிடம் ஓரளவு எச்சரிக்கையோடு நாம் பழக முடியும், பேச முடியும்; ஓரளவு பிரச்சினைகளைத் தவிர்த்து வாழ முடியும். நம் வீடுகளில் உள்ளோர், பணிபுரியும் இடங்களில் இருப்போர், உயர் அதிகாரிகள் என ஒவ்வொருவர் பற்றியும் நாம் விலாவாரியாக அறிந்து வைத்திருப்போம். அவர்களின் மேலோங்கிய குணங்களின் அடிப்படையில் பல பட்டப்பெயர்கள் கூட வைத்திருப்போம். ஆனால், முன்பின் தெரியாதவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? அவர்களின் இயல்புகள், வாழ்க்கை முறை என எதுவும் நமக்குத் தெரியாதே! பாரதியார் குறிப்பிடும்குள்ளச்சாமியின் அறிவுரைநம்மில் பலருக்கும் இன்னும் தேவைப்படுகிறதல்லவா?

அசலைவிடப் போலிக்கு இன்னும் மதிப்பு அதிகமே. புறத்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து போகின்றோம். நாகரிகமற்றவர்களாகத் தெரிவோரிடம் நம்பிக்கை வைக்க மறுக்கின்றோம். கிராமப்புற மக்களுக்கு அறிவு குறைவு எனத் தப்புக்கணக்கும் போடுகிறோம். கசங்கிய ஆடையிலும், பழங்கால உடுத்தும் முறையிலும் வருவோரைத் தீண்டத் தகாதவர்களாக எண்ணுகிறோம்.

தலைமுறை இடைவெளி வயது அடிப்படையில் மட்டுமல்ல; பல்வேறு இன, மொழி, கலாச்சார, பண்பாட்டுப் பின்னணிகளிலும் காணப்படுகின்றன. இதனால்தான் கிராமத்து வயதான பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா போன்ற நெருங்கிய உறவினர்களைக்கூட இன்றைய இளம் தம்பதியினரில் பலர் ஓரம்கட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது நாகரிக வளர்ச்சி அல்ல; தன்னலத்தின் உச்சம்! இந்நிலை வளமான, நலமான சமுதாய வளர்ச்சிக்கு இட்டுச்செல்லாது என்பதைக் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றேதான் நாம் புரிந்து கொள்கிறோம்.

முக்கியமான அவசரத் தேவைக்கான பணப் பையோடு ஓர் இளம் பெண் பேருந்து ஒன்றில் பயணம் செய்கின்றாள். இருவர் அமரும் இருக்கையில் அமர்கிறாள். தெரிந்த ஒருவர் வருவதாகச் சொல்லி, தனது பக்கத்து இருக்கையில் பிறரை அமர வைக்க மறுக்கின்றாள். அழுக்கான ஆடை, எண்ணெய் தேய்க்காத தலையுடன் பொலிவின்றி இருந்த ஒரு பெண் அந்தக் காலி இருக்கையில் அமரப் போனாள். அடுத்த நிறுத்தத்தில் உறவினர் ஒருவர் வருவதாகச் சொல்லி அவளுக்கும் அந்த இடத்தைத் தர மறுக்கிறாள். மறுப்புத் தெரிவிக்காத அப்பெண்மணி எதிர் இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள்.

சிறிது நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஓர் இளம் பெண் வரவும், கல்லூரி மாணவி போல் தோன்றிய அவளுக்கு அந்த இருக்கையைத் தாராளமாகத் தருகிறாள். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்தஅறிவார்ந்த பெண்மணிதூங்கிவிட்டாள். சுமார் மூன்று மணி நேரம் கழித்துப் பயணிகள் உணவு உண்பதற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தனர். விழிப்புத் தட்ட கண் திறந்தவள் தனது பணப்பை திருடு போயிருப்பதை அறிந்து அதிர்ந்தாள். திரும்பிப் பார்த்தாள். இவள் இடம் தர மறுத்த கசங்கிய ஆடை அணிந்திருந்த அந்தப் பெண்மணி டிப்டாப் பெண்ணிடமிருந்து இவளது பணப்பையை மீட்டுக் கொண்டிருந்த காட்சி கண்ணில் பட்டது. இருக்கை காலியாக இருந்தபோது பொதுப்பேருந்தில் கூட தனது பக்கத்து இருக்கையில் அமர விடாத அப்பெண்ணின் பணப்பையை நாம் மீட்டுக் கொடுப்பதா? தாராளமாகத் திருடிவிட்டுப் போகட்டுமே! எனக் கசங்கிய ஆடை அணிந்திருந்த கிராமத்துப் பெண்மணி எண்ணவில்லை. இதுதான் நாகரிகம், பண்பாடு எல்லாம்.

பண்பாடு உடையில் இல்லை. நாகரிகம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் இல்லை. தலைமுறை இடைவெளி வயதில் இல்லை. உருவத்தைப் பார்த்து யாரும் ஏமாந்துவிடாதீர்கள். கேவலமாகவோ, தரக் குறைவாகவோ யாரையும் எண்ணவும் செய்யாதீர்கள். சூழ்நிலைக்கேற்ப, இடத்துக்கேற்ப, தேவைக்கேற்ப தைரியமாகச் செயல்பட இப்பெண்ணால் முடிந்தது என்றால் நம்மாலும்...

மிகச்சிறிய ஆலம் விதையில்தான்

                மிகப்பெரிய மரம் உறங்கிக் கொண்டிருக்கிறது.

மிகச்சிறிய உதவிதான்

                மிகப்பெரும் மாற்றத்துக்குக் காரணமாகிறது.

மிகச்சிறிய நிகழ்வுதான்

                மிகப்பெரும் உயர்வுக்குத் தூண்டுதலாகிறது.

மிகச்சிறிய அச்சாணிதான்

                மிகப்பெரும் தேர் உருண்டோட காரணமாகிறது.

இந்த மிகச்சிறிய அச்சாணி போல் செயலாற்றுவோர் இவ்வுலகில் சிலர் உண்டு என்பதைத் திருவள்ளுவர்,

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்  உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து’ (குறள் 667)

என்ற குறளில் என்றோ நமக்குச் சொல்லிச் சென்றார்.

(தொடரும்)