Namvazhvu
தமிழகத்தில் கிறிஸ்தவம் “திருவிதாங்கூர் கல்லூரி’’
Friday, 26 May 2023 12:54 pm
Namvazhvu

Namvazhvu

குமரியில் கிறிஸ்தவம்

கொச்சியின் ஆளுகையின் கீழ் குமரி

கி.பி. 1557 இல், கோவா உயர் மறைமாவட்டத்திலிருந்து கொச்சின் பிரிக்கப்பட்டு, தனி மறைமாவட்டமாக நிறுவப்பட்டது. இம்மறைமாவட்டத்தின் கீழ் தென்னிந்தியாவின் பல பகுதிகள், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளும் உள்ளடங்கி வந்தன. இயேசு சபையினர் கொச்சின் நகரிலும், கொல்லம் மற்றும் குமரி பகுதியிலும் தங்கள் மறைத்தளங்களை நிறுவினர். அருள்தந்தை லான்சிலோட்டோ இளைஞர்களை மறைக்கல்வி ஆசிரியர்களாக, அருட்பணியாளர்களாக பயிற்றுவித்திட கொல்லத்தில் ஒரு பள்ளியை நிறுவி, அதனைதிருவிதாங்கூர் கல்லூரி’’ என அழைத்தார். கொச்சி மறைமாவட்டம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, கொல்லத்திற்கு வடக்கே பிரான்சிஸ்கன் துறவிகளும், கொல்லத்திற்கு தெற்கே இயேசு சபையினரும் மறைப்பணி புரிந்தனர். ஆனால், இரு சபையினருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், குழப்பமும் நீடித்து வந்தது.

பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த கொச்சின் ஆயர், ஆந்த்ரேதெசாந்த மரியா (1588-1615) குழப்பங்களைக் கடந்து, மறைப்பணியில் ஆர்வம் காட்டி, புதிய கிறிஸ்தவர்கள் மற்றும் புதிய ஆலயங்கள் எழ துணை நின்றார். ஆயர் ஆந்த்ரே கையெழுத்திட்ட 1598 ஆம் ஆண்டு, ஜனவரி 4 ஆம் நாள், தகவலின்படி, கொல்லம் முதல் குமரிவரை இயேசு சபையினரின் பொறுப்பில் 30 ஆலயங்களும், 14000 உரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் இருந்தனர். அப்பொழுது போர்த்துக்கல் நாட்டில் இயேசு சபையினருக்கு எதிரான மனநிலை நிலவியதால், அது அப்பட்டமாக குமரி மண்ணிலும் எதிரொலித்தது. 1663 இல், டச்சுப்படைகளின் ஆதிக்கம் அரபிக்கடலில் மேலோங்க, இயேசு சபையினரின் கொல்லம் மறையியல் கல்லூரி முட்டம் மற்றும் கடியப்பட்டினம் இடையேயுள்ள தோப்புப் பகுதியில் நிறுவப்பட்டது. இயேசு சபையின் மறைமாநில தலைமையகமும் இங்கு மாற்றப்பட்டு, செயல்பட்டது. கொச்சின் ஆயர் இல்லம் அஞ்சுதெங்கோ என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு, 1838 ஆம் ஆண்டு வரை, கொச்சி பதுரவாதோ மறைமாவட்டம் உரோமையால் முடக்கி வைக்கப்பட்டது. கொச்சி டச்சுக்காரரிடம் வீழ்ந்த போது, கோட்டாறு கடலோரப்பகுதியில் 17 ஆலயங்களும், 7500 கத்தோலிக்கரும் வாழ்ந்தனர் என்கின்றார் ஸ்ருஹாம்மர். புனித தோமா கிறிஸ்தவர்களை உன்னிப்பாக கண்காணிக்கும் பொருட்டு, அங்கமாலியிலிருந்து

கிராங்கனூருக்கு அதன் தலைமையிடம் மாற்றப்பட்டது. இச்செயல்பாடு உரோமன் கத்தோலிக்கர் மற்றும் தோமா கிறிஸ்தவர்களிடையே மேலும் விரிசல்களையும், பிணக்கத்தையும் ஏற்படுத்தியது.

நாட்டுப்புறங்களில் கிறிஸ்தவம்

கிபி 1536 இல், பரதவர் மனந்திரும்புதல் தொடங்கி கடையர், முக்குவர் என கிறிஸ்தவம் ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடலோரங்களில் மட்டுமே கரைபுரண்டது. வணிகத்தின் பொருட்டு மதுரையில் வாழ்ந்த பரதவ கிறிஸ்தவர்களின் ஆன்மீக நலனுக்காக இயேசு சபைக்குரு கொன்சால்வ் பெர்ணாண்டஸ் 1595 இல், மதுரை நகரில் குடியேறினார். இவ்வாறு, தமிழக கிறிஸ்தவம் கடற்புரத்திலிருந்து, நாட்டுப்புறத்திற்கு நகர்ந்தது. தந்தை கொன்சால்வ்கிறிஸ்தவம் ஒரு பரங்கி மார்க்கம்அதாவது, ஒடுக்கப்பட்டோருக்கானது என, பகிரங்கமாக அறிவித்தார். இதனால் மறைப்பணியில் தேக்க நிலை ஏற்பட்டதாக 1700களில் வாழ்ந்த பீட்டர் மார்டின் அடிகளார் கூறுகின்றார்.

மேலும், போர்த்துக்கல் பதுரவாதோ முறை, கிறிஸ்தவ மறைப்பணியாளர்களிடையே தெளிவற்றுக் காணப்பட்ட பிராமண சந்நியாசி - பண்டார சுவாமிகள் முறை ஆகிய குளறுபடிகளும் நாட்டுப்புறங்களில் மறைப்பணிக்கு சவாலாக அமைந்தன. 1542 இல், மதுரை நாயக்கர் விஜயநகர பேரரசிலிருந்து சுதேசி மாநிலமாக உருவாகிய பிறகு, தெற்கு திருவிதாங்கூர் (நாஞ்சில் நாடு) அடிக்கடி மதுரை நாயக்கர்களின் இராணுவதாக்குதலுக்கு உள்ளாகி, பெரும் பாதிப்பைச் சந்தித்தது.

மதுரை நாயக்கர்களால் ஏற்பட்ட இராணுவத் தாக்குதல்களைச் சரிகட்ட திருவிதாங்கூர் அரசு அதிக வரிகளை விதித்தது. இதனால் நாஞ்சில் நாட்டில் ஆங்காங்கே போராட்டங்களும், கலவரங்களும் வெடிக்க, விவசாயம் முடங்கி, மக்கள் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டனர். இராணி மங்கம்மாளின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் அடிக்கடி சோதனை என்ற பெயரில் மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு, அரசியல் குழப்பங்களால் திருவிதாங்கூர் சமஸ்தானம் திக்குமுக்காடியபோது, இயேசு சபை மறைமாநில அதிபர் ஆன்ரூ கோமஸ், நாயர் மற்றும் நாடார் மக்கள் மத்தியில் நற்செய்தி அறிவிப்புப்பணி தொடங்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்தது வரலாற்று ஆய்வாளர்களால் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. மதுரையில் மறைப்பணியாற்றிய தந்தை பெர்னார்டு தெசா நாஞ்சில் நாட்டின் நாட்டுப்புறப்பகுதியில் பணியாற்ற அழைத்து வரப்பட்டார்.

நாயர் & வெள்ளாளர்களிடையே மறைப்பணி

கடற்புரத்து மக்கள் அல்லாதோருக்கும் மறைப்பணி ஆற்ற வேண்டுமென்ற தந்தை ஆன்ருகோமஸ் கட்டளையை ஏற்ற ஜான்மெய்னார்டு அடிகளார், இராபர்ட் தெ நொபிலியின் வழி முறைகளைப் பின்பற்றி, கோட்டாறு பகுதியில் நாயர் மக்கள் மத்தியில் நற்செய்தியை அறிவித்தார்.ஆனால், ஓர் ஆண்டுக்குள் பெரும் தோல்வியைச் சந்தித்தது. மதுரையிலிருந்து, நாஞ்சில் நாட்டிற்கு வந்த தந்தை பெர்னார்டு தெசா வடக்கன் குளத்தை தனது மறைப்பணிக்கான தளமாகத் தெரிவு செய்துக் கொண்டார். சைவத் துறவிகளைப் போன்று, சந்நியாச உடையணிந்து, ஒடுக்கப்பட்ட மக்களோடு எவ்வித தொடர்பின்றி, உயர்குடிகளை மட்டும் ஈர்ப்பதில் கவனம் கொண்டார். கோட்டாரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள மருங்கூரை தெரிந்தெடுத்து, அதை வெள்ளாளக் கிறிஸ்தவர்களின் தளமாக உருவாக்கினார். துவக்கம் முதல் நல்வளர்ச்சியைக் கண்ட இத்தலம், சமய, அரசியல் குழப்பங்களால் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

எட்டு முதன்மையான நாயர் (எட்டு வீட்டு பிள்ளைமார்) குடும்பங்கள் திருக்கோவில் அறங்காவலர்களோடு கூட்டுச் சேர்ந்து, பட்டத்து இளவரசரை அரசராக்க முயற்சித்தனர். இதனால், அரசரின் கோபத்திற்கு உள்ளாகவே 1721 இல், அத்திங்கள் பகுதியில் 140 ஆங்கிலேயர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். நாடார்களும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, மருங்கூர் கிறிஸ்தவத் தளத்தை தாக்கி, இயேசு சபை மறைமாநில தலைமையகத்தைத் தரைமட்டமாக்கினர். இயேசு சபை மறைமாநில தலைமையகம் தோப்பிலிருந்து முதலில் குளச்சலுக்கும், பின்பு இராஜாக்கமங்கலத்திற்கும் மாற்றப்பட்டது. போர்ச்சூழல் மறைந்து பட்டத்து இளவரசருக்கு மகுடம் சூட்டியப்பிறகு, நாட்டில் அமைதி திரும்பியது.

கோட்டாறு பகுதியில் நாயர்களுக்கான மறைத்தளம் தோல்வியடையவே திருவனந்தபுரம் பகுதியில் நேமம் மறைத்தளம் சிறப்பாக அவர்களுக்காக உருவாக்கப்பட்டது. தந்தை செவரியோ போர்கீஸ் முயற்சியில் நேமம் ஆளுநரே திருமுழுக்குப்பெற்றார். மேலும், அருட்தந்தையர் பெர்னார்டு தெசா, பீட்டர் மார்டின் மற்றும் சைமன் தெ கார்லெலோ முயற்சியில், நேமம் மறைத்தளம் பெரும் வளர்ச்சிக் காணவே, 1708 இல், மதுரை மறைத்தளத்திலிருந்து நேமம் பிரிக்கப்பட்டு, தனி அதிபர் மற்றும் நிதி மேலாண்மையின்கீழ் இயங்கியது. இருப்பினும், குறுகிய காலத்திற்குள் நேமம் மறைத்தளம் மருவியது. நேமம் நிலைகுலைய இரண்டு காரணங்கள் முதன்மையாகப் பார்க்கப்படுகின்றன 1. கிறிஸ்தவ நாயர்களுக்கெதிரான அரசின் அடக்குமுறைகள், 2. ஒடுக்கப்பட்ட மக்கள் (நாடார்) பெருமளவில் திருமுழுக்குப் பெற்றதால், அவர்களோடு இணைந்து செயல்படுவதால் ஏற்பட்ட தயக்கம் இது தந்தை லூயிரோட்ரிக்ஸ் அவர்களின் கூற்று. இரண்டு பண்டார சுவாமிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், மேலும், இரண்டு குருக்கள் ஐரோப்பியரின் உடையில், நாட்டுப்புறங்களில் வாழ்ந்த சாவ்லக்கர்கள் என்ற பரதவர் மற்றும் முக்குவர் மத்தியில் பணியாற்றினார்.

நாடார் மக்களிடையே நற்செய்திப்பணி

திருவிதாங்கூர் நாட்டின் தென்கடைப்பகுதியான வடக்கன்குளம், நாடார் கிறிஸ்தவர்களின் தாய்வீடாக, தலைவாசலாகப் பார்க்கப்படுகிறது. கி.பி. 1713 இல், தந்தை பிராந்தலோனி எழுதிய மடலில் நாடார்கள் ஏறக்குறைய 1685 இல், தந்தை பீட்டர் மொரத்தோ அவர்களால் திருமுழுக்குப் பெற்றனர் என குறிப்பிடுகின்றார். இக்காலக்கட்டத்தில் தந்தை பெர்னார்டு தெசா வெள்ளக்கோடு பகுதியில் (முளகுமூடாக இருக்கலாம்) ஒரு பணித்தளத்தை நிறுவி, மறைப்பணியாற்றினார். பரதவர்கள் திருமுழுக்குப்பெற்று, 150 ஆண்டுகளுக்குப் பிறகே, நாடார்கள் மத்தியில் நற்செய்தி பணியை இயேசு சபையினர் துவங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாஞ்சில் நாட்டின் அனைத்து ஊர்களிலும் வாழ்ந்த சாணார்கள் (நாடார்கள்) கணிசமான அளவில் கத்தோலிக்க மறையைத்தழுவினர். தொடக்கத்தில் நாடார் கிறிஸ்தவர்களுக்கு பரதவர் மற்றும் முக்குவர் கிறிஸ்தவர்களே ஆன்மீக வழிகாட்டியாக செயல்பட்டனர்.

1653 இல், கயத்தாற்றிலும், 1666 இல், காமநாயக்கன்பட்டியிலும், கத்தோலிக்கரும் அவர்களுக்கென்று ஆலயங்களும் இருந்ததைப் பற்றி இயேசு சபை குறிப்பு பேசுகின்றது. கிபி 1684 முதல் மதுரை தென்கிழக்குப்பகுதியில் நாடார்கள் ஆண்டுக்கு 600 பேர் திருமுழுக்குப் பெற்றனர், வேத கலாபனையின் பொருட்டு, குமரிப் பகுதியில் 18 ஆம் நூற்றாண்டு இவர்கள் குடியேறினர். 1680 ஆம் ஆண்டு, சாந்தாயி என்ற சாணார் பெண்மணி தனது கணவர் ஞானமுத்து என்பவரோடு ஆனக்கரை பங்கின் தோப்புவிளை என்ற ஊரிலிருந்து வந்தார். வடக்கன்குளத்தில் கிறிஸ்தவம் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் சாந்தாயி ஆவார். இவரின் நற்செய்திப்பணியால் நாடார்கள் பலர் கிறிஸ்தவத்தைத்  தழுவினர். 1720 இல், வடக்கன்குளத்தை மையமாகக் கொண்டு, 3000 நாடார்கள் கத்தோலிக்கராயினர். காரங்காடு, வேங்கோடு மற்றும் முளகுமூடு நாடார் கிறிஸ்தவர்கள் பத்பநாபசுவாமி சிலையை வழிபட துன்புறுத்தப்பட்டனர். பலர் மலைப்பகுதியில் ஓடி மறைந்து, தங்கள் விசுவாசத்தைக் காத்தனர். சிலர் அடிபணிந்தனர். அருளன் மற்றும் பெலவேந்திரன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். அருளன் மகன் அருளப்பன் என்ற சிறுவன் நீதிபதிக்கெதிராக இக்கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, தானும் விசுவாசத்திற்காக மரிக்க முன்வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.

1840 ஆம் ஆண்டுகளில் காரங்காடு, மாங்குழி, முளகுமூடு, மாத்திரவிளை, ஆலஞ்சி, முள்ளங்கிவிளை மற்றும் வேங்கோடு வாழ் நாடார்கள் பெருமளவில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தைத்  தழுவினர். சமயசமூகஅரசியல், பொருளாதார நெருக்கடிகளை காலந்தோறும் சந்தித்த நாடார்கள், தங்கள் மானமிகு வாழ்விற்கு கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளை விரும்பி ஏற்றனர். 1809 ஆம் ஆண்டில், இலண்டன் மறைப்பணி புரோட்டஸ்டாண்ட் குழுமத்தைச் சார்ந்த, ரிங்கின்டோல் மற்றும் சார்லஸ் மேயத் முயற்சியில் நாடார்கள் பெருமளவில் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இவ்வாறு, சமய, சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற கிறிஸ்தவம் அவர்களுக்கு பெரும் துணையாக நின்றது.

(தொடரும்)