Namvazhvu
இரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைன் போருக்கு எதிராக ஜி-20 தலைவர்கள் கண்டனம்!
Saturday, 19 Nov 2022 05:22 am
Namvazhvu

Namvazhvu

நவம்பர் 16, புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன்உக்ரைன் நாட்டிலிருந்து இரஷ்யா முழுமையாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும், உக்ரைனில் நிகழ்ந்துவரும் போரானது மிகப்பெரிய மனிதத் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும், உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் பலவீனங்களை அதிகரிக்கிறது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளனர் ஜி20 நாடுகளின் தலைவர்கள்

பன்னாட்டுச் சட்டம்த்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள், இயற்கையோடு இணைந்த உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் புதுமையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.

கல்விபெறும் உரிமை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கான முயற்சிகளும் ஜி-20 அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகியோரை ஆதரிப்பதிலும், மீட்பதிலும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மதித்துப் போற்றுவதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதையும் இந்த அறிவிப்பு எடுத்துக்காட்டியுள்ளது.