Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் இரண்டாம் வத்திக்கான் சங்க ஆவணங்களை வாசியுங்கள்         
Friday, 01 Jul 2022 12:17 pm
Namvazhvu

Namvazhvu

புனித ஆண்டு அல்லது யூபிலி ஆண்டு 2025 ஐக் கொண்டாடுவதற்கு முன்பாக, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நான்கு ஆவணங்களை முழுமையாக படிக்க 2023 ஆம் ஆண்டில் நேரத்தை ஒதுக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கத்தோலிக்க திருஅவையானது யூபிலி ஆண்டு 2025 முன்னிட்டு 2023 ஆம் ஆண்டில் தனது நம்பிக்கையாளர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட நான்கு ஆவணங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டில் யூபிலி ஆண்டிற்கான செபங்கள் தயாரித்து அதை நாள்தோறும் செபிப்பதில் கவனம் செலுத்தும் என்று பேராயர் ஃபிசிச்செல்லா தெரிவித்தார். புனித ஆண்டு அல்லது யூபிலி ஆண்டு என்பது திருப்பயணம், செபம், மனந்திரும்புதல் மற்றும் இரக்க செயல்களில் ஈடுபடும் நேரமாகும். 1470 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கு ஒரு புனித ஆண்டு அல்லது யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிவிலியத்தின் பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி கொண்டாடப்பட்ட ஓய்வு, மன்னிப்பு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஆகும். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நான்கு ஆவணங்கள் பின்வருமாறு:

1.சாக்ரோசாங்க்தம் கொன்சிலியம் (Sacrosanctum Concilium)

2.லூமென் ஜென்ந்தியம் (Lumen Gentium)

3.தேயு வெர்பும் (Dei Verbum)

4.கௌதியம் எத் ஸ்பெஸ் (Gaudium et Spes).