Namvazhvu
குடந்தை ஞானி நல்ல ஆயராம் ஆண்டவரின் அழைப்புக்குச் செவிசாயுங்கள் – திருத்தந்தை
Tuesday, 17 May 2022 12:41 pm
Namvazhvu

Namvazhvu

நம்மைவிட நம்மை நன்கு அறிந்தவர் ஆண்டவர் என்பதை உணர்ந்தவர்களாய், அவர் நம்மை அழைக்கும்போது அவரது குரலுக்குச் செவிசாய்க்கவேண்டும் மற்றும் நம் நல்ல மேய்ப்பராக அவரைப் பின்பற்றவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 08 ஆம் தேதி, ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கேட்டுக்கொண்டார்.

நல்ல ஆயன் ஞாயிறாகிய, மே 08 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, நம் ஆண்டவருக்கும், நம் ஒவ்வொருவருக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பு குறித்து, இஞ்ஞாயிறு திருவழிபாடு கூறுகிறது என்று தெரிவித்தார்.

தன் ஆடுகளோடு உடனிருக்கும் ஆயரின் கனிவான மற்றும் அழகான உருவம் குறித்து, இன்றைய திருவழிபாட்டில் நம் ஆண்டவர் பேசுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் ஆடு, அவரது குரலுக்குச் செவிசாய்க்கும், அவரை அறிந்திருக்கும் மற்றும் அவரைப் பின்செல்லும் என்று கூறினார்.

செவிமடுத்தல், அறிந்திருத்தல், பின்செல்லுதல்

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், செவிமடுத்தல், அறிந்திருத்தல், பின்செல்லுதல் ஆகிய மூன்று சொல்லாடல்கள் சுட்டுகின்ற செய்தியைக் கொண்டிருக்கின்றன என்றும், ஆண்டவரது அழைப்பிற்கும், உறவுக்கும் நாம் எப்போதும் திறந்த மனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்றும் விளக்கிய திருத்தந்தை, இக்காலத்தில், வேலை, குடும்பம் மற்றும் தனிப்பட்ட சூழல்களில் மூழ்கியுள்ள நாம், தந்தையின் வார்த்தைக்குச் செவிசாய்க்க ஆர்வமாய் இருக்கும் குழந்தை போன்று, நாமும் ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிமடுக்க ஆவலாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்ப்பது, அவரோடும், நம் சகோதரர் சகோதரிகளோடும் ஒன்றித்திருக்க நமக்கு உதவுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நாம் ஆண்டவரிடம் செபிக்கும்போது, அவரிடம் நம்மைக் கையளிக்கும்போது, அவரை அழைக்கும்போது, நமக்கு அவர் செவிசாய்க்கிறார் என்று கூறினார்.

ஆண்டவர் தம் ஆடுகளை அறிந்திருக்கிறார்

இயேசுவுக்குச் செவிமடுக்கையில், அவர் நம்மை அறிந்திருக்கிறார் என்பதைக் கண்டுகொள்கிறோம், விவிலியத்தின்படி, அறிந்திருத்தல் என்பது அன்புகூர்தலாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் உள்ளும் புறமும் என நம்மைப் பற்றி முழுமையாக ஆண்டவர் அறிந்திருக்கிறார், அவர் நம் நட்பை, நம்பிக்கையை மற்றும் நெருக்கத்தைத் தேடுகிறார், அவரால் எப்போதும் அன்புகூரப்படுகிறோம், ஒருபோதும் நாம் தனிமையில் இல்லை என்ற சிறப்பான உண்மையை நாம் ஏற்கவும், புரிந்துகொள்ளவும் உதவுகிறார் என்று குறிப்பிட்டார்.

நல்ல ஆயராகிய ஆண்டவர், “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திபா 23:4) என்ற திருப்பாடல் வரிகளின் அனுபவத்தில் நாம் வாழ உதவுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, துன்பங்கள், நெருக்கடிகள் போன்ற கட்டங்களில், ஆண்டவர் நம்மை அறிந்திருக்கிறார், அன்புகூர்கிறார், காக்கின்றார் என்பதைக் கண்டுணரவேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார் என்றார்.

நல்ல ஆயரைப் பின்செல்லல்

நல்ல ஆயராம் இயேசுவைப் போல, வாழ்வில் தொலைந்துபோனவர்கள் அல்லது உதவி தேவைப்படுவோருக்கு நம் பரிவன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.