Namvazhvu
குடந்தை ஞானி மதமாற்றமா?!  பேராயர் மச்சாடோ பாஜக அரசுக்கு சவால்!
Wednesday, 11 May 2022 09:53 am
Namvazhvu

Namvazhvu

தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க பேராயர் பீட்டர் மச்சாடோ, கடந்த 100 ஆண்டுகளாக கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிள் எத்தனை பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர் என்பதை விசாரிக்குமாறு கர்நாடாக மாநில அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த புனித கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருவிவிலியத்தை நடத்த வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்து அடிப்படைவாதிகள் முன்வைத்த இக்குற்றச்சாட்டுகளை பேராயர் திட்டவட்டமாக மறுத்தார்.

எங்கள் கிறிஸ்தவ பள்ளிகளில் திருவிவிலியம் பயன்படுத்தப்படுகிறதா அல்லது மதம் கற்பிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

எங்கள் பள்ளியில் பிற மதத்தைச் சேர்ந்த எந்த மாணவர்களும் கிறிஸ்தவர்களாக மாறவில்லை என்று எங்களால் தைரியமாகச் சொல்ல முடியும். கடந்த 100 ஆண்டுகளில் மதமாற்றம் அல்லது திருவிவிலியத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டால், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் பொறுப்புள்ள மக்கள். கல்வி கற்பிப்பதில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை நிம்மதியாக விட்டுவிடுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்என்று பேராயர் மச்சாடோ ஏப்ரல் 29 ஆம் தேதி UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.