Namvazhvu
அருள்பணி. ஜாண் குழந்தை கோட்டாறு மறைமாவட்டம் “புலி பதுங்குவது பாய்வதற்காகவே”
Wednesday, 02 Mar 2022 05:48 am
Namvazhvu

Namvazhvu

தவக்காலம் எனும் பாலைநில அனுபவத்தின் பொருள்

40 நாட்கள் - உண்மையில் நாற்பது அல்ல; ஞாயிறுகளையும் சேர்த்தால் நாற்பத்தி ஆறுநாட்கள்-தவக்காலம் உயிர்ப்பு விழாவைக் கொண்டாட நாம் செய்து கொள்ளும் தயாரிப்பு மட்டுமே என்றால், அந்த தயாரிப்பிற்கு 40 நாட்கள் தேவை இல்லை. ஒரே நாள் போதும்!

ஆனால், வாழ்விலொரு மாற்றத்திற்கான தயாரிப்பே தவக்காலம் என்று கொண்டால், 40 நாட்கள் தேவைதான் என்று சொல்ல வேண்டும். இப்படிப்பார்த்தால் தவக்காலத்தின் பொருளும் புரிந்திடும். இக்கட்டுரை தவக்காலத்தின் மையமான இன்னொரு விளக்கத்தைத் தரும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளது.

வாழ்வின் அழைப்புக்கேற்ற அர்ப்பணத்திற்கு

சென்னையில் இருக்கும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அதன் விருதுவாக்கு எழுதப்பட்டிருக்கிறது: “ஓதி உணர்ந்து பிறர்க்கு உரை”. ஓர் ஆசிரியரின் பணி என்ன? முதலில் தானே கற்பது; இரண்டாவது, கற்றதை உள்ளூர உணர்தல்; மூன்றாவது, கற்று உணர்ந்ததைப் பிறருக்கு எடுத்துரைத்தல். இதையே ஒரு போதகருக்கும், குருவுக்கும் வாழ்வின் நோக்கமாகச் சொல்லலாமல்லவா? ஆனால், அதுமட்டும் போதுமா?

பல்கலைக் கழகத்தின் உள்ளே சென்றதும், இவ்வரி அடங்கியுள்ள திருக்குறள் முழுவதும் தரப்பட்டுள்ளது. இதோ அந்த குறள்:

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல். (834: பேதைமை அதிகாரம்)

அதாவது: ஒருவர் தாம் கற்று அதைத் தம் உள்ளுணர்ந்து, பிறருக்கு அதனை எடுத்துக் கூறினாலும், தாமே அதன் படி நடவாதிருந்தால், அவர் மதியீனருக்கெல்லாம் மதியீனர் என்பது இதன் பொருள்.

குரு, ஆசிரியர், போதகர் என்னும் பொருளில் “ரபூனி” (யோவா 20:16) என்று அழைக்கப்பட்ட இயேசு, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்: “நான் போதகர் தான்; ஆண்டவர் தான்” என்றார் (யோவா 13:13). இத்தகைய நிலைக்கு ஏற்ற வாழ்வு தன் போதனையின்படி நடப்பதிலேயே அடங்கியிருக்கின்றது.

இதனை நன்கு அறிந்திருந்த இயேசு, தம்மை ஒருமுகப்படுத்தவும், தம்மையே அகநிலையில் உருவாக்கவும் விரும்பினார்.

இதற்கு இரண்டு தொடர் செயல்களைச் செய்தார்:

ஒன்று அவரது திருமுழுக்கு,

இன்னொன்று அவரது பாலைநில அனுபவம்.

இயேசுவின் திருமுழுக்கும் பாலைநில அனுபவமும்

இயேசு தமது பொது வாழ்வைத் தொடங்கு முன் 40 நாட்கள் பாலைநிலத்திலிருந்தார் என்று ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் கூறுகின்றன (மத் 4:1-4; லூக் 4:1-2; மாற் 1:2) அப்போது அவர் உண்ணா நோன்பிருந்தார் என்று மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிடுகின்றன. மூன்று நற்செய்தி நூல்களும் இந்தப் பாலைவன அனுபவத்தை திருமுழுக்கோடு இணைத்துத்தான் தருகின்றன. எனவே, திருமுழுக்கையும், பாலைநில அனுபவத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

திருமுழுக்கில் இயேசுவுக்கு இருவித அனுபவங்கள் கிடைத்தன: மற்ற மனிதர்களோடு ஒரே வரிசையில் நின்றபோது, அவர் பெற்றது ஓர் உடன் பிறப்பு அனுபவம். பாவிகளோடு தானும் பாவியாய் வரிசையில் நின்று, “பாவ மன்னிப்பு அடைய மனம்மாறி” (மாற் 1:4) எல்லாரும் பெற்ற திருமுழுக்கைத் தாமும் பெற்றார். தானும் சாமானியனே; என் உடன் பிறப்புகளைப் போலவே, தானும் என்னும் உணர்வு. இதுதான் முதல் அனுபவம்.

இரண்டாவது, அந்தத் திருமுழுக்கில் அவர் பெற்ற ‘அப்பா’ அனுபவம்: “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக் 3:22) என்ற தந்தைக் கடவுளின் சான்றுரை.

இந்த இருவித பரிமாணங்கள் கொண்ட திருமுழுக்கு அனுபவத்துக்குப் பின்னரே, பாலை நிலத்தில் நாற்பது நாட்கள் இருந்தார் என்று பார்க்கின்றோம். திருமுழுக்கில் அவர் பெற்ற உடன்பிறப்பு அனுபவம், “அப்பா அனுபவம்” ஆகியவற்றைத் தொடர்ந்து, அவர் தமது சவாலான பொது வாழ்வுக்கும், தாம் மேற்கொள்ளவிருந்த வீரம் நிறைந்த போராட்டங்களுக்கும் தம்மைத் தயாரிக்கவே 40 நாட்களை எடுத்துக்கொண்டார்.

மேலும், தமக்குத் தேவைப்பட்ட பொழுதெல்லாம் பாலைநில அனுபவத்துக்கு மீண்டும், மீண்டும் சென்றார். அதெல்லாம் “புலி பதுங்குவது பயத்தினாலல்ல, பாய்வற்காகவே” என்னும் பொருளிலே தான். நிஜ வாழ்விலிருந்து தப்பி ஓடுவதற்காக அல்ல; அந்த வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளத் தம்மையே தயாரிக்கவே. இந்த இயேசுவின் சுய தயாரிப்பில் மூன்று கூறுகளை நாம் அடையாளப்படுத்தலாம்.

1. தன்னையே அறிதல்

கி.மு. 469 இல் கிரேக்க நாட்டில் ஓர் ஏழைச் சிற்பியின் மகனாகப் பிறந்தவர் சாக்ரடீசு. “நீ யார்? எதற்காக வந்திருக்கிறாய்? என்ன செய்யப் போகிறாய்? என்பதை முதலில் தெளிவாக அறிந்து கொள். பின், அதன்படி நட!” என்று, அவரது அப்பா அவருக்கு அறிவுரை கூறியதாகவும், சாக்ரடீசு அவருடைய அப்பாவின் ஞானம் நிறைந்த அறிவுரைப்படி வாழ்ந்தாரென்றும் சொல்லப்படுகிறது. உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், அசிங்கமான தோற்றம். இது தான் சாக்ரடீசு. ஆனாலும், அவர் பேச்சைக் கேட்க இளைஞர்கள் கூட்டமாக வந்தார்கள். தம்மையே அவர் அறிந்திருந்ததால், துணிவுடன் சாவினை ஏற்றுக்கொண்டார்.

தவக்காலம் நமக்குத் தருவது, தரவேண்டியது இந்த அடிப்படை அனுபவமே.  ‘நான் யார்?’ என்று அறிந்திருக்கும் சுய அறிவு. இது வேர்களோடு மரம் கொள்ளும் உறவுக்கு ஒப்பாகும். வேர்களோடு உறவு தான் மரத்தின் உயிருக்கும், உறுதிக்கும் அடிப்படை! எனினும், இந்த சுய அறிவு என்பது, ஒரு சித்தாந்த உணர்வு நிலை அல்ல; மாறாக, தனது உறவுகளின் உணர்வு நிலை.

இந்த மனிதரின் உறவுகள் ஐவகைப்படும்: தன்னோடு உறவு, பிறரோடு உறவு, உலகோடு உறவு, வாழ்வோடு உறவு, கடவுளோடு உறவு. இந்த ஐவகை உறவு நிலைகளைப் புதுப்பித்துக்கொள்ளும் காலமாகத் தவக்காலம் இருக்காவிட்டால், நாற்பது நாட்களும் வீணே!

ஆனால், அந்த ஐவகை உறவு நிலைகளில் கருபோன்றது. தன்னோடு ஒருவர் கொண்டிருக்கும் உறவே! சுய ஆய்வு, சுய விமர்சனம், சுயத்தூய்மை, தன் நிறை குறைகள் உணர்தல், தன் பாவ நிலையைத் துணிவுடன் அறிக்கையிடுதல் முதலியவை இதில் அடங்கும்.

2. தேர்ந்து தெளிதல்

தேர்தல் காலமொன்றை இப்பொழுது தான் சந்தித்தோம். (உள்ளாட்சி) தேர்தல் காலம் ஓர் ஆணவக்காலம் எனலாம். எவ்வாறெனில், அரசியல்வாதிகள் எல்லாருமே தம் மேலும், தம் கட்சியிலும் எந்தக் குறையும் இல்லையென்றும், பிறர் தான், பிறக்கட்சிகள் தான், பிறக்கூட்டணிகள்தான், மிக மிக மோசம் என்று சொல்லித் திரிகிறார்கள். இவற்றோடு விளம்பரங்கள் வேறு! அதிலும் கவர்ச்சி நடிகைகளும் கூட, பயன்படுத்தப்படுகின்றனர். இதில் எது நன்மை? எது தீமை? என்று அறிதல் மிக மிக முக்கியம். “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” மேலும்,

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள் 423).

நலம் தரும் மருத்துவம் பற்றி வள்ளுவனார் கூறுவது புகழ் வாய்ந்தது.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள் 948).

அதாவது, இதுதான் நோய் என்று அறிதல் மட்டுமன்று; அந்த நோயின் காரணத்தையும், அந்த காரணத்தையே வேரறுக்கும் முறையையும் அறிந்துச் செயல்பட வேண்டும். தன்னிலும், சமுதாயத்திலும் படிந்திருக்கும் கறைகளைக் கண்டறிந்திட, தேர்ந்து தெளிதல் மிகமிக முக்கியமானதொன்றாகும். இந்தத் தேர்ந்து தெளிதலுக்குரிய காலம் தவக்காலம்.

தேர்ந்து தெளிதலுக்கு இன்னொரு கோணம், தன்னிடம் இருக்கும் ஆற்றல்களை அறிதலாகும். உலகம் என்ன சொல்கிறது, பிறர் என்ன சொல்கிறார்கள் என்று, எண்ணும் பழக்கம் நூற்றுக்கு 96 பேரிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிறர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். ஆனால், தன்னிலை அறிந்து, தனது ஆற்றல் உணர்ந்து செயல்பட, “பாலைவனத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் செல்வது” (மாற் 6:31) என்ற பாலைநில அனுபவம் மிகமிகத் தேவை.

3. இலக்குத் தெளிவும் செயல் முதன்மை வகுத்தலும்

“நான் ஏன் இதைச்செய்ய வேண்டும் என்பது தெளிவானால், எப்படி என்பதில் எச்சிக்கலும் இருக்காது” என்பார் உளநலவியலாளர் விக்டர்ஃப்ராங்கிள். இயேசுவின் வாழ்வில் ஓர் இலக்குத் தெளிவு அவரது பாலைவன அனுபவத்தில் ஏற்பட்டது. எனவே, அந்த அனுபவத்தை தொடர்ந்து, அவர் தமது இலக்கினைத் தெளிவுபடுத்துவதை லூக்கா நற்செய்தியாளர் தொடர்புடன் விளக்குவார். இயேசுவின் பாலை நிலச்சோதனை அனுபவத்தைத் தொடர்ந்து, லூக்காவில் வரும் முதல் நிகழ்வு நாசரேத்து தொழுகைக்கூடத்தில் அவர் எசாயா ஏட்டிலிருந்து வாசித்தும், அதை மறுவாசிப்பு செய்து, தமது இலக்கினைத் தெளிவாக எடுத்துக்கூறியதும் தான் (காண்.லூக் 4:19-19).

வாழ்வின் இலக்குத் தெளிவு என்பது, மிகமிக நன்மையானது ஆகும். ஒருவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அகச் சுதந்திரமும், அக நிறைவும், செயல் தெளிவும், செயலூக்கமும், துணிவும் எல்லாம் இலக்குத் தெளிவிலிருந்து தான் பிறக்கும். “துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை” என்ற வீரபாண்டியக் கட்டபொம்மனின் வசனம் அர்த்தமுள்ளது.

புதிய ஏற்பாடு முன்வைக்கும் நபர்களில் திருமுழுக்கு யோவான் துணிச்சல் மிக்கவர். அவரைப் பற்றி இயேசுவே கூறும்போது: “நீங்கள் எதைப்பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?.”... என்றெல்லாம் கேட்டு விட்டு, “மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை” என்று தம்மைவிடக் கூட திருமுழுக்கு யோவானைப் புகழும் இயேசு! (லூக் 7:24-28). இயேசு வாழ்வின் இலக்குத் தெளிவுக்காகப் பாலைநிலத்துக்குச் சென்றார். யோவான் வாழ்ந்ததே அந்தப் பாலை நிலத்தில் தான்.

புனித பவுல் கூட, தான் மனம் மாறியதும் “உடனே அரேபியாவுக்குச் சென்றேன்” (கலா 1:17). அரேபியா என்று பவுல் குறிப்பிடுவது, பாலை நிலத்தைத்தான். அவ்வனுபவம் பவுலுக்கும், இலச்சியத் தெளிவையும், மன உறுதியையும் தந்தது. பழைய ஏற்பாட்டில் வரும் நபர்களில் பாலைநில அனுபவத்தால் தெளிவும், உறுதியும் பெற்றவருள் மோசே ஒருவர். எகிப்தில் தன் உணர்ச்சி மிகுதியால் கொலைக்குற்றத்துக்கு ஆளாகி, பாலை நிலத்துக்குத் தப்பியோடி, இறை அனுபவம் பெற்றவர் அவர். இன்னொருவர் எலியா இறைவாக்கினர். கார்மேல் குகையில் இறையனுபவம் பெற்றவர் அவர்.

தவக்காலம் நம் அனைவருக்கும் இத்தகு அர்த்தமுள்ள பாலைநில அனுபவமாக இருக்கின்றதா? அல்லது சிலுவைப்பாதைகள் ஆராதனைகள், ஒருசந்திகள் போன்ற பக்தி முயற்சிகளோடு மட்டும் நின்று விடுகிறதா? சிந்திப்போம். இத்தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.