Namvazhvu
அருள்முனைவர் ஜான் பாப்டிஸ்ட் கனவை நனவாக்கிய புனித யோசேப்பு - சில விவிலிய சிந்தனைகள்
Wednesday, 22 Dec 2021 07:04 am
Namvazhvu

Namvazhvu

முன்னுரை:

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியோடு புனித யோசேப்பின் ஆண்டை திருஅவை கொண்டாடி முடித்துள்ளது. உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பெருந்தொற்று(கள்) காரணமாக, யோசேப்பு ஆண்டு, புனித யோசேப்பைப் போலவே அதிக ஆரவாரமில்லாமல், ஆர்ப்பரிப்பும், பெரும் கொண்டாட்டங்களும் இல்லாமல் முடிக்கப்பட்டு விட்டது. இந்த சூழலில் நாம் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பெருவிழா மீண்டும் குடில், விண்மீன் என களைகட்டத் தொடங்கும். வழக்கம் போல, யோசேப்பின் பங்கு கிறிஸ்மஸ் கதைபாடல்களிலும், மறையுரைகளிலும், செய்திகளிலும் பின்னுக்குத் தள்ளப்படும். இந்த சூழலில் விவிலியத்தில் இயேசுவின் பிறப்பு மற்றும் குழந்தை பருவ நிகழ்வுகள் பற்றிய விவரிப்பில் புனித யோசேப்பின் பங்கு பற்றி விவரித்து அதிலிருந்து இக்காலத்திற்கு, கொரோனா காலத்திற்கும், கிறிஸ்துமஸ் காலத்திற்கும் தேவையான சிலபல சிந்தனைகளையும் அளிப்பதே இவன் என் நோக்கம்.

இயேசுவின் பிறப்பு பற்றிய விவரிப்பு, இறையியல் விவரிப்பு நாம் அறிந்தது போல, இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரிப்புகள் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் காணப்படுகின்றன. அவற்றினிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும், (2-ம் கன்னிமை பிறப்பு) வேற்றுமைகள் பலவும் மிகுந்துள்ளன. உதாரணத்திற்கு மத்தேயு நற்செய்தியின் விவரிப்பு உலக, நாட்டு வரலாற்றுகளுடன் இணைத்து (2 ம் : ஏரோது) கூறப்படுகின்றிது. மாறாக, லூக்காவில் விவரிப்பு குடும்பங்களுடன் (சக்கரியா, மரியா) இணைந்து கூறப்படுகின்றது. லூக்காவில் பெண்கள் அதிக முக்கியத்துவம் பெற (எலிசபெத்து, மரியா) மத்தேயுவில் ஆண்கள் (யோசேப்பு, ஏரோது, ஞானியர்) முக்கியத்துவம் பெறுகின்றன. எது எப்படியிருப்பினும் இரு நற்செய்தி விவரிப்புகளும் இயேசுவின் பிறப்பு மற்றும் வளர்ப்புப் பற்றி விவரித்தாலும், அவற்றின் வழியாக பல இறையியல் மற்றும் கிறிஸ்தியல் கருத்துகளை வாசகர்களுக்கு அளிப்தே நற்செய்தியாளர்களின் நோக்கமாக இருந்தது. இதே நிலைப்பாட்டுடன் நாம் நற்செய்தி விவரிப்புகளை இவன் அனுகுவோம்.

மத்தேயு நற்செய்தியின்படி யோசேப்பு:

மத்தேயு தனது நற்செய்தியின் முதலிரு அதிகாரங்களில் தலைமுறை அட்டவணை தவிர்த்து, இயேசுவின் பிறப்பு மற்றும் குழந்தை பருவம் பற்றி விவரிக்கின்ற போது, அதை பழைய ஏற்பாட்டில் ஐந்து இறைவாக்குகள் (ஏசா 7:14, மீக் 5:1, ஏசா 11: 1, எரே 31:15, எசா 4:3) நிறைவேறுகிறதாக, ஐந்து காட்சிகளாக (காட்சி 1- மத் 1:18-25, காட்சி 2- மத்2:1-12, காட்சி 3- மத் 2: 13-15, காட்சி 4- மத் 2:16-18, காட்சி 5- மத் 2:19-23) அமைத்துக் காட்டுகின்றார். இவற்றில் காட்சி1, 3 மற்றும் 5 இல் யோசேப்பும், அவர் கண்ட கனவும் விவரிக்கப்படுகின்றது. ஆக மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு பிறப்பு விவரிப்பின் தொடக்கமும், மைய்யமும், நிறைவும் யோசேப்பும் அவர் கண்ட கனவும் தான். எனவே, யோசேப்பு மத்தேயு நற்செய்தியில் குழந்தை பருவ நிகழ்வில் நீக்கமற நிறைந்துள்ளார். இனி யோசேப்பின் இம்மூன்று கனவுகள் அதில் கூறப்பட்டதை நனவாக்க, செயல் படுத்த அவர் ஒற்ற செயல்பாடுகள் மற்றும் இடர்பாடுகள் பற்றி இவண் காண்போம்.

கனவு ஒன்று:

இயேசுவின் பிறப்பு வித்தியாசமானது. மத்தேயு நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் பிறப்பின் விவரிப்பை மெசியா யார்? எப்படி பிறப்பார் எங்கே? எங்கிருந்து? எனும் வினாக்களுக்கு விடையளிப்பதாகவும் கொள்ளலாம். இதன்படி இவ்வினாக்களுக்கான விடைகள் முறையே மத் 1: 1-17 (யார்), மத் 1: 18-25 (எப்படி), மத் 2:1-12 (எங்கே) மற்றும் மத் 2:13-23 (எங்கிருந்து) ஆகிய பகுதிகளில் காணக்கிடக்கின்றன. எனவே, இந்த முதல் கனவு இயேசு எப்படி தாவீதின் மகனும், அபிரகாமின் மகனுமாகின்றார் என்பதை விளக்குகின்றது. இதை சிறிது இவன் விளக்கலாம்.

இயேசு தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன் என்பதை விளக்க தலைமுறை அட்டவணையை தந்த மத்தேயு அதையாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு” (வச 16) என கொண்டு வந்து நிறுத்தியவர். இலக்கியலிடைவின் படி பார்த்தால்யோசேப்பின் மகன் இயேசுஎன்று எழுதியிருக்க வேண்டும். ஆனால், அதை மாற்றிமரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு” (வச 16) என மாற்றி எழுதுகின்றார். இதன்படி மரியா, யோசேப்பு ஆகிய இருவரும் தத்தமது பங்களிப்பை இயேசுவின் பிறப்புக்கு அளிக்கின்றார்கள். அதாவது, மரியா ஆண்துணையின்றி தூய ஆவியால் இயேசுவை கருத்தரிக்கின்றார். இது வச 18லும், தூதரின் விளக்கத்திலும் தெரிய வருகின்றது (வச 20). யோசேப்பு தன் பங்கிற்கு இயேசுவின் பிறப்பிற்கு உடலளவில் பங்களிக்கவில்லையென்றாலும், இயேசு தாவீதின் மகன் என்பதற்கு சட்டடப்பூர்வமான அங்கிகாரத்தை வழங்குகின்றார். இதை தனது இரு செயல்கள் மூலம் நிறைவேற்றுகின்றார். 1. தம் மனைவியை மணவிலக்கு செய்யாமல் ஏற்றுக் கொண்டார். (வச-24). அதாவது மரியாவுக்கும், இயேசுவுக்கும் சட்டப்பூர்வமான அங்கிகாரத்தை வழங்குகின்றார். 2. யோசேப்பு குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டதன் வழி, அவரை தன் மகனாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு சட்டப்பூர்வமான தந்தையாகின்றார். இந்த தெளிவுக்கும், செயல்பாட்டுக்கும் வர அவர் சந்தேகம், மன உளைச்சல் எனும் அனுபவங்களை தாண்டிவர வேண்டியிருந்தது.

கனவு இரண்டு:

எகிப்திற்கு ஓடிப்போன திருக்குடும்பம் மத்தேயுவின் முதல் அதிகாரம் மெசியா யார்? (தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன்) எப்படி பிறப்பார்? (தூய ஆவியால் கருத்தரித்து) எனும் வினாக்களுக்கு விடையளிக்க, இரண்டாம் அதிகாரம் அவர் எங்கே பிறப்பார் என்னும் வினாவிற்கு, பெத்லகேமில் பிறப்பார் என்றும் (மத் 2:56) எங்கிருந்து அழைக்கப்படுவார் என்பதற்கு, எகிப்திலிருந்து (மத் 2:15) என்றும் விடை கானுகின்றது. இதில் யோசேப்புக்கு அருளப்பட்ட இரண்டாம் கனவு அதில் அளிக்கப்பட்ட, “ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும்” (மத் 2:13) எனும் இறைச் செய்தி திருக்குடும்பத்தை எகிப்துக்கு கொண்டு செல்கிறது. இதன் வழியாகஎகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்எனும் எசாயாவின் (11:1) இறைவாக்கு நிறைவேறுகின்றது (காண் மத் 2:15). இங்கு நமக்கு இஸ்ரயேல் இனம் எகிப்துக்கு சென்று அங்கிருந்து விடுதலை பெற்று பாலஸ்தினம் திரும்பியது நம் நினைவில் நிழலாடுகின்றது. இவ்வாறு, இஸ்ரயேல் பட்ட துன்பங்களை இயேசுவும் பட்டார் என்பது நிறுவப்படுகிறது. இந்த கனவின் செய்தியை கட்டளையை நனவாக்குவதற்கு திருக்குடும்பமும், அதன் தலைவராகிய யோசேப்பும் எவ்வளவோ துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது.

கனவு மூன்று:

நாசரேத்தில் குடியமர்ந்த திருக்குடும்பம், இந்த மூன்றாம் கனவின் வழி மத்தேயு தொடக்கத் திருஅவை சந்தித்த ஒரு சிக்கலுக்கு விடை கானுகின்றார். அதாவது இயேசு யூதா குலத்தவராயிருந்தால், பெத்லகேமில் (தாவீதின் நகர்) பிறந்தவராயிருந்தால், பின் ஏன் அவர்நசரேயன்என்று அழைக்கப்படுகின்றார். நாசரேத் கலிலேயாப் பகுதியாயிற்றே என்பதே அக்கேள்வி. இதற்கு விடையாக வருவது யோசேப்பின் மூன்றாம் கனவு. இதன் படி இறைவன் திருகுடும்பத்தை எகிப்திலிருந்து புறப்படச் செய்து, இஸ்ராயேலுக்கு வரச்செய்து, யூதேயாவில் அர்க்கெலா (ஏரோதின் மகன்) அரசாள்கிறார். இதன் வாயிலாகநசரேயன் என அழைக்கப்படுவார்” (மத் 2:23) எனும் இறைவாக்கும் நிறைவேறுகிறது. இவ்வாறு, மத்தேயு நற்செய்தியின் இறுதியில் தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு தூய ஆவியால் கருவுற்று, யோசேப்பை சட்டப்பூர்வமான தந்தையாக பெற்று (மத் 1), பெத்லகேமில் பிறந்து திரும்பி, கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் குடிபெயர்ந்துநசரேயன்என அழைக்கப்பட்டார் எனும் செய்திகள் விளக்கப்படுகின்றார். இவை அனைத்தும் நிறைவேறுவதற்கும், கனவில் இறைவன் தந்த கட்டளைகளை தன் கடமையாக ஏற்று செயல்படுவதற்கும் அழைத்தவர், இறைதிட்டத்துடன் ஒத்துழைத்தவர் யோசேப்பு.

நமது வாழ்விலும் இறைதிட்டத்தை தேர்ந்து தெளியவும் அதை இடர்பாடுகளின் மத்தியில் நிஜமாக்கி, நிகழ்த்திக் காட்டவும் நமக்கு திரியாக திகழ்கின்றார் புனித யோசேப்பு. இயேசுவின் பிறப்பு, யோசேப்பை நினைவில் கொண்டு, இந்த கிறிஸ்துமஸ கொண்டாடுவோம்.