Namvazhvu
நல்லவரைப் பற்றிய நினைவுகள் நல்லவரைப் பற்றிய நினைவுகள் நிலவுவதை உறுதி செய்ய…
Monday, 29 Nov 2021 11:31 am
Namvazhvu

Namvazhvu

பயங்கரவாத தொடர்பு உள்ளவர் என்ற பொய்க்குற்றத்தின் பேரில், கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போது மருத்துவமனையில் உயிரிழந்த இயேசுசபை சமூக ஆர்வலர், அருள்பணி ஸ்டான்சுவாமி அவர்களின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் முயற்சியாக, வழக்கு மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் தன்வாழ்நாளை அர்ப்பணித்து செயலாற்றிய, 84 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான்சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இயேசு சபையினரால் விடுக்கப்பட்ட விண்ணப்பத்தை, மும்பை உயர்நீதிமன்றம் ஏற்று, புதிதாக இவ்வழக்கை துவக்கிநடத்த இசைவு அளித்துள்ளது.

தலித்மக்களின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் நினைவுநாளை சிறப்பிக்கும் விதமாக, 2018 ஆம் ஆண்டு சனவரி முதல் தேதி பீமாகோர்கானில் நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகளோடு தொடர்புபடுத்தி, 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட அருள்பணி ஸ்டான்சுவாமி அவர்கள், சிறையில் நோயுற்று, இவ்வாண்டு ஜூலை 5 ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார்.

என்ஐஎ எனும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்றும், அரசைக்கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார்கள் என்றும், கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான அருள்பணி ஸ்டான்சுவாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என, ஏனைய சமூக நடவடிக்கையாளர்களுடன் அவர் சார்ந்திருந்த இயேசுசபை இணைந்து, நீதிமன்றம் வழியாக நிரூபிக்க முயன்று வருகிறது.

அருள்பணி ஸ்டான்சுவாமி அவர்கள் மீதுசுமத்தப்பட்டுள்ள களங்கம் அகற்றப்பட வேண்டும் என மும்பையின் புனித சேவியர் கல்லூரி இயக்குனர், அருள்பணி பிராஸர்மாஸ்கரன்ஸ் அவர்கள், நீதிமன்றத்தில் விடுத்த விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அவர் சார்பாக வாதாடும் வழக்குரைஞர் மியிர்தேசாய் அவர்கள், ஒருவர் உயிரோடு இருந்தாலும், இறந்து விட்டாலும், அவர் பெயரில் இருக்கும் களங்கத்தை அகற்ற இருக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கின்றது என உரைத்தார்.

அருள்பணி ஸ்டான்சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்க புதியவழக்கு வழிமுறைகளைத் துவக்க நீதிமன்றம் அனுமதியளிதுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட, இயேசுசபை அருள்பணி ஆரோக்கியசாமிசந்தானம் அவர்கள், இறந்து விட்ட ஒரு மனிதருக்கு இறுதிச்சடங்கை மட்டும் நிறைவேற்றி விட்டால் போதாது, நல்லவரைப்பற்றிய உயர்ந்த நினைவுகள் நிலவுவதும் உறுதி செய்யப்பட வேண்டு ம்என்றார்.

அருள்பணி ஸ்டான்சுவாமி அவர்கள்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தொடர்ந்து பல தரப்புமக்களும் விவாதித்து வந்த நிலையில், அவரின் இவ்வுலக வாழ்வு முடிவுற்றுள்ள போதிலும், அவர் என்றும் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என உரைத்த, வழக்குரைஞர்களாக பணிபுரியும் அருள்பணியாளர்கள், மற்றும் துறவியரின் தேசிய அமைப்பின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர், இயேசுசபை அருள்பணிசந்தானம் அவர்கள், நீதித்துறையின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டிருந்த அருள்பணி ஸ்டான்சுவாமி அவர்கள் மீதான களங்கம் அகற்றப்பட வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்தினார்.