Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் கோலாஸ்  இயக்கத்தின் பன்னாட்டு இளையோருடன் திருத்தந்தை
Friday, 26 Nov 2021 06:06 am
Namvazhvu

Namvazhvu

உலகின் பல நாடுகளில், இளையோரின் கல்வி தொடர்புள்ள பணிகளை நிறைவேற்ற, கோலாஸ் என்ற பெயரில் இயங்கிவரும் ஓர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் 71 இளையோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 25 ஆம் தேதி வியாழன் மாலை, 4 மணிக்குச் சந்திக்கின்றனர் என்று, இவ்வியக்கம், புதனன்று, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உலகின் 5 கண்டங்களின் 41 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள 71 இளையோர், உரோம் நகரில் அமைந்துள்ளமரியா மாத்தர் எக்லேஷியா என்ற பன்னாட்டு பாப்பிறைக் கல்லூரியில், நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாய் முதல், 28 ஆம் தேதி ஞாயிறு முடிய, கோலாஸ் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்று வருகின்றனர்.

இக்கருத்தரங்கின் ஒரு முக்கிய நிகழ்வாக, நவம்பர் 25 ஆம் தேதி வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும் இளையோர், கோவிட் பெருந்தொற்று தங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும், திருத்தந்தை வெளியிட்டுள்ளஅனைவரும் உடன்பிறந்தோர்திருமடலை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு உலக நாடுகள் தங்கள் அரசியல் வாழ்வை அமைக்கமுடியும் என்பது குறித்தும் பேசவிருக்கின்றனர் என்று கோலாஸ் இயக்கத்தின் அறிக்கை கூறுகிறது.

இக்கருத்தரங்கில் பங்கேற்றுவரும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த, 16 வயதுக்கும், 27 வயதுக்கும் உட்பட்ட இளையோர், எதிர்கால உலகைப்பற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள், இக்கருத்தரங்கிலிருந்து திரும்பிச் சென்றபின், இளையோர், தங்கள் நாடுகளில் ஆற்றக்கூடிய பணிகள், ஆகியவை குறித்து, திருத்தந்தையுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்கின்றனர்.