Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் படுகொலையில் தப்பிப்பிழைத்தவர்களில் கடைசி துறவி மரணம்
Friday, 26 Nov 2021 05:47 am
Namvazhvu

Namvazhvu

1996 ஆம் ஆண்டில் அல்ஜீரியா நாட்டில், டிராபிஸ்ட் ஆழ்நிலை துறவு சபை இல்லத்தில் இடம்பெற்ற கடுமையான படுகொலையில் தப்பிப் பிழைத்து, உயிர்வாழ்ந்தவர்களில் கடைசி துறவியான   அவர்கள், தனது 97வது வயதில், நவம்பர் 21 ஆம் தேதி ஞாயிறன்று இறைபதம் சேர்ந்தார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிராபிஸ்ட் சபை துறவி சுமாக்கர் அவர்கள், மொரோக்கா நாட்டின் மையப் பகுதியிலுள்ள, அட்லாஸ் நமதன்னை டிராபிஸ்ட் துறவியர் இல்லத்தில், அமைதியான மரணத்தைத் தழுவினார் என்று, ராபேட் தலத்திருஅவை அறிவித்தது.

அல்ஜீரியாவில் பத்தாண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, 1996 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 27ஆம் தேதி இரவில், திபிரைன் டிராபிஸ்ட் சபைத் துறவியரின் இல்லத்தில், அவ்வில்லத் தலைவர் கிறிஸ்டியன் டி ஜார்ஜ் அவர்கள் உட்பட, ஏழு துறவிகள், இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர். அக்கடத்தல் நடந்த இரு மாதங்களுக்கு பிறகு, திபிரைன் இல்லத்திற்கு அருகில், அந்த ஏழு பேரின் தலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

அக்கடத்தலில், துறவியர் சுமாக்கர் அவர்களும், அமீடீ அவர்களும் தப்பிப் பிழைத்தனர். அமீடீ அவர்கள் 2008 ஆம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். அக்கடத்தல் இடம்பெற்ற இரவுநேரத்தில், துறவி சுமாக்கர் அவர்கள், அவ்வில்லத்திற்கு அருகிலிருந்த கட்டடத்தில், சுமைதூக்கும் வேலை செய்துகொண்டிருந்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, மொரோக்காவில் துறவி சுமாக்கர் அவர்களைச் சந்தித்து, அவரது கையை முத்தமிட்டார்.

அல்ஜீரியாவில் முப்பது ஆண்டுகள்

1924 ஆம் ஆண்டில் பிரான்சின் லொரைனில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த துறவி சுமாக்கர் அவர்கள், 1953 ஆம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, 1957 ஆம் ஆண்டில் பிரிட்டனில், நோட்ரே டேம் டி திம்மாடியு துறவு இல்லத்தில் சேர்ந்தார். அப்போதைய அல்ஜீரிய பேராயரின் வேண்டுகோளின்பேரில், இவர் மற்ற மூன்று துறவியரோடு அல்ஜீரியாவுக்கு வந்து, ஏழைகள் மத்தியில் ஏழையாக வாழ்ந்தார்.

அல்ஜீரியாவில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய துறவி சுமாக்கர் அவர்கள், 1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற படுகொலைகளுக்குப்பின், மொரோக்கோ நாட்டின் அட்லாசிலுள்ள டிராபிஸ்ட் துறவியர் இல்லத்தில், 2000மாம் ஆண்டுமுதல், 8 துறவியரோடு வாழ்ந்துவந்தார்.