Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு (தானி 12:1-3, எபி 10:11-14, 18, மாற் 13:24-32)
Saturday, 20 Nov 2021 04:57 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் உலகின் முடிவைப் பற்றியும், மானிட மகனின் இரண்டாம் வருகையைப் பற்றியும் நமக்கு கூறுகின்றன. உலகமே அழிவுறப்போகிறது. உயிர்களும் தங்களுக்கான முடிவினை தேடிக்கொள்ளப் போகின்றன. இப்படி அனைத்தும் அழிந்தாலும், என் வார்த்தைகள் அழியவே அழியாது என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இது மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில், வார்த்தை என்பது வேறொன்றுமில்லை அது கடவுளே என்று யோவான் நற்செய்தியாளர் கூறுகிறார். எனவே, வார்த்தையான இறைவனுக்கு அழிவு என்பதே இல்லை. அதே நேரத்தில் இறைவார்த்தையின்படி நடப்போர் புனிதர்களாய் என்றும் அழியா வாழ்வு பெறுகிறார்கள். இறைவார்த்தையின்படி நடவாதோர் முடிவில்லா தண்டனையை பெறுவார்கள். இவ்வாறு இறைவனின் வார்த்தை என்றுமே அழியாமல் உள்ளது. இறைவார்த்தையின்படி வாழும்போது நாமும் அழியா வரம் பெற்றவர்களாய் வாழ்வோம் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

வேற்றுநாட்டு மன்னர்கள் தன் யூத மக்களை அடிமைப்படுத்தி ஒடுக்குவதைக் கண்டு உள்ளம் வருந்திய தானியேல், யூத இனத்தின் தலைமைக் காவலரான மிக்கேல் தோன்றுவார். அப்போது, அதிகமான துன்பங்கள் இருக்கும். யாருடைய பெயர் எல்லாம் வாழ்வின் புத்தகத்தில் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே மீட்புபெறுவர். மற்றவர்கள் முடிவில்லா இழிவுக்கும் வெட்கத்திற்கும் ஆளாவர் என்று இறைவன் தனக்களித்த காட்சியை தானியேல் விளக்குவதை இம் முதல்வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மனித குருக்கள் ஒரேவிதமான பலியை நாள்தோறும் செலுத்தி வந்தார்கள். நாள்தோறும் செலுத்திவந்தாலும், அவர்கள் பலிகளால் பாவம் நீங்கவில்லை. ஆனால், இறைகுரு ஒரே ஒருமுறை மட்டுமே பலிசெலுத்தி பாவிகளாய் இருந்த அனைவரையும் புனிதத்தன்மை கொண்டவர்களாய் மாற்றி நிறைவுள்ளவராக்கினார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைகேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. இரக்கமுள்ள தந்தையே, உம் திருஅவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், துன்பத்தில்.ஏழ்மையில், வறுமையில் தவிக்கும் மக்களுக்காக அன்றாடம் ஜெபிக்கவும், இவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும், உம் மக்கள் அனைவரையும் புனிதத்தன்மை கொண்டவர்களாக மாற்றக்கூடிய வல்லமையை உம்மிடமிருந்து பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்புத்தந்தையே, நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களை தேர்ந்தெடுத்த மக்களை அடிமைகள்போல நடத்தாமல், மக்களின் நலனில் முழு அக்கறைகொண்டு உழைத்திடவும், எல்லா மொழி, இன, சமுதாயம் சார்ந்த மக்களை ஒன்றாகக் கருதி அனைவருக்கும் ஏதுவான நல்ல ஆட்சியை தந்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் வானகத் தந்தையே, உம் வார்த்தைகள் மீது ஆர்வம் கொண்டு வாழவும், உம் வார்த்தைகளின் படி வாழவும், உம் வார்த்தைகள் எங்கள் செயல்களில் வடிவம் பெறவும், அதை பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் பரம தந்தையே, இந்த விஞ்ஞான காலத்தில் எங்கள் பங்கிலும் இல்லங்களிலும் வாழும் சிறு பிள்ளைகள், தங்களின் குழந்தை பருவத்திலிருந்தே உமது வார்த்தைகளை அன்புசெய்து திருவிவிலியத்தை அனுதினமும் வாசிக்க கூடியவர்களாக வளரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் விண்ணக தந்தையே, நீர் மட்டுமே நிலையானவர் உம்மால் மட்டுமே எல்லாம் முடியும் என்பதை முழுமையாக நம்பி அதை ஏற்று உம்மை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ்ந்து நிலை வாழ்வைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.