Namvazhvu
prof. D. Philip & Prof. Immaculate இடறி விழுந்தாலும் எழுந்திரு Even if you stumble, Rise up!!
Friday, 05 Nov 2021 06:23 am
Namvazhvu

Namvazhvu

 

வாழ்வில் நாம் நடந்து செல்லும்போது, கவனமாக நடந்து செல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இயேசு நமக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை இடம் பெறும் அறிவுரை இடறி விழுவது பற்றியது.

இயேசு மறுமொழியாக, பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு. அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. அனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லைஎன்றார் (யோவான் 11: 9,10).

இதில் ஓர் உன்னதமான படிப்பினை உண்டு. நாம் பகலில் நடந்து செல்ல வேண்டும் என்பதன் பொருள் ஒளியில் நடக்க வேண்டும், கவனித்து நடக்க வேண்டும். ஆண்டவர் இயேசுநானே ஒளிஎன்று சொன்னார். அப்படி சொன்ன ஒரே தலைவர் இயேசு கிறிஸ்து மட்டும் தான் (யோவா 8: 12, 9: 5, 1:9). அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன் மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவா 1:5).

உண்மையிலே இன்றைய காலகட்டத்தில் பலர் பல விபத்தில் விழுந்து கிடக்கின்றனர். பகலில் நடந்தாலும் இடறி விழும்படி கண்ணுக்குத் தெரியாத கொரோனா எனும் இடறுகல் இருக்கிறது என்பதை அனைவரும் நினைவு கூர  வேண்டுமென்று இந்த காலக் கட்டத்தில் நினைவூட்டப் பெறுகிறோம். இனிமேல் குழந்தைகளும் பள்ளி செல்ல வேண்டியிருக்கிறது. கண்ணுக்கு தெரியாத அந்த கிருமியால் இடறி விழுந்துவிடாதபடி பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இலவசமான பஸ் வருகிறது என்று அலைமோதும் குழந்தைகள் ஓடிப்போய் பேரூந்தில் ஏறுவதைப் பார்க்கும் போது வேதனை நம் இதயத்தை அழுத்துகிறது. ஓடி இடம் பிடிக்க நெறுக்கத்தள்ளிக் கொண்டு ஏறும்போது, ஒற்றை செருப்புகள் அங்கங்கு விழுந்துக் கிடப்பதைக் காணும் போது இதயமெல்லாம் வேதனை நிரம்புகிறது. இடறிவிழாமல் தப்பிச் சென்று ஏறி விட்டதை நினைத்து ஆறுதல் அளித்தாலும், இந்த நெருக்கடியான சூழலில் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்து நடக்க நாம் பயிற்றுவிக்க கவேண்டும். பகலில் நடந்தாலும், இடறிவிழச்செய்யும் சூழ்நிலை இருக்கிறது. அதில் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் ஒளிதான். இயேசுகிறிஸ்துவே அந்த ஒளி.

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திருப்பாடல் 119:105)

இடறிவிழாமல் காத்துக் கொள்ள இறைவார்த்தை மட்டும்தான் நம்மைப் பாதுகாக்க முடியும். அது குறித்து மீக்கா இறைவாக்கினர் இவ்வாறு சொல்வார்: “என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே; ஏனெனில் நான்  வீழ்ச்சியுற்றாலும் எழுச்சி பெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்” (மீக்கா 7:8) என்றுசொல்லப்பட்ட வாக்குறுதி நமக்கு பெரிதும் உதவி செய்யும். கொரோனா நம்மைச் சுற்றிலும் இருளில் சூழ்ந்திருப்பதுபோல இருந்தாலும், ஆண்டவர் நமது ஒளியாய் இருந்தால்தான் இடறி விழாமல் காத்து, பாதுகாப்புடன் நடக்க முடியும்.

நிகழ்ச்சி: சாப்ட்வேர் கம்பெணியில் இலட்சங்கள் சம்பாதிக்கும் ஆற்றல்மிக்க இளைஞன் பாதுகாப்பு கவசமும், தடுப்பு ஊசியும் முக்கியம் என்று நினைக்காமல் தனது பலத்தை நம்பிக்கொண்டு, ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அது. ஏழு நாட்களாக இருந்த இருமல், சளியைப் பொருட்படுத்தாமல் வாழ்ந்த போது, கொரோனா டெஸ்ட் கொடுக்க வேண்டிய நிலை வந்தது. கொரோனா பாஸிடிவ் என்று வந்தபோதும் அதிக பயம் வரவில்லை. இரண்டு நாளில் மூச்சுவிடத் திணறி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது, நிலவரம் சரியில்லை என்பது புரிந்தது. வழக்கமாகச் செல்லும் ஆஸ்பத்திரியிலிருந்து வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விடும்படி சொன்ன போது, சிறிது அச்சம் வந்தது. ஆக்ஸிஜன் நிலை குறைந்து விட்டபோது, இடறி விழுந்து கிடக்கும் நிலை வந்ததுபோலத் தோன்றியது. உடனே ஒரே ஒரு வழிதான் அவருக்குத் தெரிந்தது. கண்ணுக்குத் தெரியும்படி இருந்த சிலுவையை உற்று பார்த்தால் போதும் என்பது புரிந்தது.

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;

அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை” (திருப்பாடல் 34:5).

மேலும், “சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்” (1பேது 2:24). இந்த உண்மை தெரியாமலே சிலுவையை உற்றுப் பார்த்து விடுதலையைப் பெற்றுக் கொண்டதாகச் சொன்னார்.

அந்த இளைஞன் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்:-

நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்என்றார் (யோவா 12:32). ஆம், சிலுவையே வெற்றியின் சின்னம்.

தான் உயர்ந்தப்பட வேண்டிய ஒளி என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார்.

இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒளி உங்களோடு இருக்கும் போதே ஒளியை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்என்றார் (யோவா 12:35,36). மிக அருமையான பகுதி.

அவர் ஒளியில் இருப்பதுபோல் நாமும் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்“ (யோவா 1:7).

நம் பாவம் மன்னிக்கப்படவும், இயேசுவின் இரத்தம் நம்மில் செயலாற்றவும் ஒன்றே ஒன்றுதான் முக்கியம். அது ஒளியில் நடப்பது. அதாவது, யாருடனும் பகையோ, வெறுப்போ இருக்கக் கூடாது. அப்போதுதான் இடறாது.

தாம் சகோதர சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில்

நிலைத்திருக்கின்றனர். இடறி விழவைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை” (1 யோவா 2:10).

இவ்வாறு எல்லோருடனும் நட்புறவுடன் நாம் வாழும் போது, ஒளிபெற்றவர்களாக வாழுவோம். இடறிவிழாது தொடர்ந்து நடக்க முடியும்.

மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர், மண்ணுலகு அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக் கொண்டு செல்வார்கள்” (திருவெளிப்பாடு 21:24. ஆம், ஒளியில் நடக்கும் மக்களினத்தார் தான் அவரை சென்று அடைவார்கள். அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுநற்செயல் தான்அது. மழைப்பொழிவிலே,

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாரே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்போது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5: 15-16) என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆம், இடறி விழாமல் நடக்க மூன்று வழிகள்:-

1. இறைவார்த்தையின் ஒளியில் நடக்க வேண்டும் (திபா 19: 105)

2. நற்செயல் செய்ய வேண்டும் (மத் 5: 15-16)

3. எல்லோருடனும் நட்புடன் வாழ வேண்டும் (1 யோவா 1:7)

இவற்றை செயல்படுத்துவோம், இடறி விழாது ஒளியில் தொடர்ந்து நடப்போம்.

-இன்னும் கதிர் வீசும்-