Namvazhvu
குடந்தை ஞானி உலக பட்டினிக் குறியீடும் ஏழைத்தாயின் மகனும்
Thursday, 04 Nov 2021 08:12 am
Namvazhvu

Namvazhvu

ஒவ்வோர் ஆண்டும் அயர்லாந்தில் உள்ள கன்சர்ன் வேர்ல்ட்வைடு அமைப்பும் ஜெர்மனியின் வேல்டு ஹங்கர் ஹில்பே அமைப்பும் இணைந்து உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலை வெளியிடுகின்றன. இந்தப் பட்டியலை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, எடை, உயரம், உயிரிழப்பு போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கிறது. இந்த உலகளவிலான பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது நாடாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்ற 107 நாடுகளில் 27.2 புள்ளிகளுடன் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. . இந்த ஆண்டு 2021-ல் இடம்பெற்ற 116 நாடுகளில் 27.5 புள்ளிகளுடன் 101-வது இடத்துக்கு இந்தியா சரிந்துள்ளது. இந்தியாவிற்கு பின்னால் சோமாலியா, ஏமன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், மற்றும் காங்கோ நாடுகள் உள்ளன. பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு பெலாரஸ், போஸ்னியா, பிரேசில், சிலி, சீனா, குரேஷியா, கியூபா போன்ற நாடுகள் முதல் இடத்தில் உள்ளன.

வழக்கம்போல மத்திய அரசு இந்த ஆய்வு முடிவுகளையும் தரவுகளையும் பட்டினி குறியீட்டையும் ஏற்காமல் கடுமையான மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய அமைச்சகம், ‘மக்கள்தொகையில் சத்தான உணவு கிடைக்கப்பெறாதவர்களின் விகிதாச்சாரம் குறித்த, உணவு மற்றும் விவசாய அமைப்பின் (எஃப்.எ.ஓ.) மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்தப் பட்டினிக் குறியீடுகள் அமைந்துள்ளன என்றும், இந்த அறிக்கையை வெளியிட்ட சர்வதேச அமைப்புகளான ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’, ‘வெல்ட்ஹங்கர்லைஃப்’ ஆகியவை தங்களது ஆய்வை முறையாகச் செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட எஃப்.ஏ.ஓ என்ற ஐநா அவையின் சிறப்பு முகமைகளில் ஒன்றான உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலகம் முழுவதும் பட்டினியை ஒழிக்கவும் சத்துணவு மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் செயல்பட்டுவரும் அமைப்பாகும். உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலகளாவிய ஆய்வுகளை ஏறக்குறைய 75 ஆண்டுகளாக நடத்திவருகிறது.

உலக அளவில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவின் உள்கட்டமைப்பு உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு போதாதெனினும், மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் புலனாகிறது. ஏழைத்தாயின் மகனான பிரதமர் தம் வீண் ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் துயரம் போக்க முன்வர வேண்டும். தன் தலைமையில்கீழ் செயல்படும் அமைச்சகத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வறுமையொழிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட புரதச் சத்துக்கள் நிறைந்த காளான்களை பல்லாயிரக் கணக்கில் உண்பதைவிட, கடைக்கோடி மனிதன் கால்வயிறு கஞ்சி குடிப்பதற்கு உதவிட வேண்டும். கேமராக்களின் வெளிச்சத்தில் மயிலுக்கு உணவளிப்பதைவிட, சாலையோரத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் பசியாற உதவிட வேண்டும். அக்னி ஏவுகணையை ஒரிசாவின் ஏவுதளத்தில் சோதிப்பதைவிட, பசியால் பற்றி எரியும் ஏழைத்தாய்களின் பிள்ளைகளின் வயிற்று அக்னி அணைவதற்கு உதவ வேண்டும். இக்கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையேற்றமும் அவற்றின் விளைவாக உயரும் அடிப்படை பொருள்களின் விலைவாசி உயர்வும் ஏழைகளின் வாய்க்கும் வயிற்றுக்குமான இடைவெளியை இன்னும் அதிகரிக்கிறது. வறுமையொழிப்பிற்கான திட்டங்களை அரசு போர்க்கால அடிப்படையில், இக்கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முன்னெடுக்க வேண்டும். அதானிக்கும் அம்பானிக்கும் அளிக்கும் வரிச் சலுகைகளை நிறுத்திவிட்டு, ஏழைகளின் பசி போக்குவதற்கான வயிற்றுச் சலுகைகளை அளிக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத்திட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்றியமைக்க வேண்டும். பொதுவிநியோக அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படும் உணவுப்பொருள்கள் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் ஏழை எளிய மக்களை சென்றடைவதற்கு உதவ வேண்டும். ஏழைத்தாயின் மகன் என்ற உணர்வு உள்ளூற இருந்தால் நிச்சயம் பிரதமர் இதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார்.

இந்தியாவின் வளர்கிறது என்பதற்காக, இரயில் பெட்டியில் மூன்றாம் வகுப்பை எடுத்துவிட்டு, ‘வறுமை ஒழிந்துவிட்டது’ என்று முழக்கமிட்டதுபோல வெற்றுக் கோஷம் வெறும் ஏட்டுச் சுரைக்காயே.

அரைகுறை பட்டினி என்ற இந்த அவலத்தை, அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் மட்டுமின்றி, பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரேஷன் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு விதமான சத்துணவுத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களையும், அவர்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக்கூடிய கூலியையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

உலகத்தின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பது என்னவோ சரிதான். அதே நேரத்தில், மொத்த மக்கள்தொகையில் உணவுப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் உணவு மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற நிதி ஆயோக் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

ஆனால், மோடி அரசோ இதற்கு நேர் எதிர் திசையில், ரேஷன் விநியோகத்தில் உணவுப் பொருட்களுக்குப் பதிலாகப் பணப் பட்டுவாடாவைக் கொண்டுவர முயலுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, பதுக்கலுக்கும் விலை உயர்வுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் வேலை உத்தரவாதத்தையும், குறைந்தபட்ச கூலி கொடுப்பதையும் இல்லாது ஒழித்திருக்கிறது. வேளாண்சட்ட மசோதா மூலம் உணவு உற்பத்தியாளர்களான விவசாயிகளை வயலிலிருந்து வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது.

நண்பர்களான அம்பானியும் அதானியும் உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் எந்தளவிற்கு முன்னேறிச் செல்கிறாரோ, அந்தளவிற்கு இந்தியாவில் ஏழ்மையும் பட்டினியும் அதிகரிக்கவே செய்யும் என்பதை இந்த ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய ஏழைகளின் வயிற்றின் உணவறை கொஞ்சமும் நிரம்பவில்லை; ஆனால் இல்லந்தோறும் கழிப்பறை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது. இதுதான் பாஜகவின் ‘புதிய இந்தியா!’ ஏழைத்தாயின் மகனின் அதானி இந்தியா!