Namvazhvu
Fr. Gnani நம் பகைமுரண்- ‘நாம் தமிழர்’ சீமான்!
Thursday, 04 Nov 2021 06:24 am
Namvazhvu

Namvazhvu

நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சில நாட்களுக்கு முன்பு பனைச் சந்தை திருவிழாவில்தமிழர்கள் இந்துக்கள் அல்ல; தமிழர்களின் சமயம் சிவசமயம்; எங்கள் சமயம் சைவம். எங்கள் சமயம் மாலியம் என்னும் வைணவம். கிறிஸ்தவம் ஒரு ஐரோப்பிய மதம்; இஸ்லாம் அரேபிய மதம். மரச்செக்குக்கு திரும்பியதைப் போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல அனைவரும் தமிழ் சமயத்துக்கு திரும்புங்கஎன்று தன் மூக்கு வழியாக மாட்டுமூளையைச் சொறிந்து பேசினார். பனையைச் சந்தைப்படுத்தும் இடத்தில், தன் கட்சியைச் சந்தைப்படுத்தினார்.

தாய்மொழியாம் தமிழ் மொழியை வைத்து அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், ‘நாம் தமிழர்என்பதை சி.பா.ஆதித்தனாரிடமிருந்து கடன் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கே உரிய பாணியில், மேடைதோறும் முழக்கம் செய்து, தூக்கிப் போட்டு மிதிக்கும் உரிமையுள்ளகிரீஸ் டப்பாஉறுப்பினர்களைக் கொண்டு இக்கட்சியைக் கட்டமைத்தார். இளைய தலைமுறையின் ஆதரவைப் பெற்று கணிசமான வாக்குகளையும் பிரித்தார்.

பிறப்பால் கிறிஸ்தவரான இவர், தன் சமயத்தைத் துறந்தபோது அது அவர்தம் தனிமனித உரிமை என்று யாரும் பொருட்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் பெரிதும் போற்றும் நற்கருணையை அவர் நக்கல் அடித்தபோதும், ‘தந்தையே இவர் தெரியாமல் செய்கிறார்; இவரை மன்னியும்என்று பொறுத்துக்கொண்டனர்.

நாங்கள்’ (நாம்) என்ற அடைமொழியுடன் அவர் கட்சியை ஆரம்பித்தபோதே, ‘நீங்கள்என்று ஒரு கூட்டத்தை, பிறரை அவர் விலக்கிவைக்க துணிந்தார். இன, மொழி அடிப்படையில் அவர் ஆரம்பித்த கட்சியே ஒரு பாசிசத்தின் வடிவம் என்பதே உண்மை. முதலில் இன - மொழி அடிப்படையில் அடித்தளத்தை அமைத்தவர், காலப்போக்கில், ‘முருகன் என் முப்பாட்டன்என்று ஒரு புது ரூட் எடுத்தார். பாஜகவின் வேல் யாத்திரையைவிட இவர்தம் இசுசு காருடனான காவடி யாத்திரை, போதை மாத்திரையைப் போல பலரையும் ஈர்த்தது. திராவிடத்தை எதிர்த்தார்; அது அவர்தம் கட்சிக் கொள்கை என்று சகித்தோம். காங்கிரஸ்-திமுகவை எதிர்த்தார்; அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இது அவர்தம் அரசியல் உரிமை என்று மௌனம் காத்தோம். தைப்பூசத்திற்கு விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதையும் பொறுத்தோம்.

இன அரசியலைப் பேசியவர் இப்போது மாட்டுமூளையுடன் மத அரசியலை முன்வைக்கிறார். தமிழ் தேசிய கிறித்தவர் என்றுகூடகிரீஸ் டப்பாக்களாக’  நம்மில் சிலர் இவருக்கு முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து மகிழ்ந்தனர். இவர்தமிழ் இந்துத்துவத்தை’, தத்துவமாக முன் வைத்து கத்துகிறார் என்று அன்றே நாம் சொன்னதை யாரும் நம்பவில்லை. குலதெய்வ கோயிலில் தன் மகனுக்கு புரோகிதரைக் கொண்டு சமஸ்கிருத யாகம் வளர்த்து, சிவகோத்திரம் என்று சொல்லி பூஜை புனஸ்காரம் செய்தபோது, இவருக்கு இராம.கோபாலனும், அர்ஜூன் சம்பத்தும், எச். ராஜாவுமே பரவாயில்லை என்று நமக்குள் சிரித்தோம்.

நாம் தமிழர்என்று இன அரசியலை ஆரம்பித்தவர், ‘நாம் இந்துஎன்று இப்போது மத அரசியலை முன்வைக்கிறார். பாஜகவின் தாய்மதம் திரும்பும்கர்வாப்சிகொள்கைக்கும் நாம் தமிழரின்தாய்மதம் திரும்புங்கள்என்பதற்கும் பார தூர வித்தியாசமில்லை. தாய் மதம் திரும்புவதை மரச் செக்கு எண்ணெய்க்கும் கருப்பட்டிக்கும் ஒப்பிட்டு தனக்கே உரிய கீழ்த்தரமான அரசியல் வியபார புத்தியை திரு.சீமான் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக, அர்ஜூன் சம்பத் இல்லாத குறையை நடிகர் வடிவேலு இல்லாத குறையை தன் எச்சில் வழியாக சீமான் நிறைவுச் செய்கிறார். பாஜகவின் மத அரசியலும் நாம் தமிழரின் மத அரசியலும் ஒன்றுதான். பாஜக தேசிய இந்துத்துவத்தை முன்னெடுக்கிறபோது, ‘நாம் தமிழர்’, தமிழ்தேச இந்துத்துவத்தை முன்னெடுக்கிறது. நாம் தமிழரின் கட்சிக் கொள்கை வரைவே மிகத் தெளிவாக, “மூன்றாம் முரண்பாடுகளான முகமதியமும் கிறித்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை. சட்டப் பாதுகாப்பும் சொத்துடைமை வலுவும் பன்னாட்டு பின்புலமும் கொண்ட, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அவ்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்என்று ஆவணப்படுத்துகிறது.

நாம் அவருக்கு பகைமுரண் அல்ல; அவரும் அவர்தம் கட்சியும்தான் நமக்கு பகைமுரண். அவர் நம்மை எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளவேண்டியதில்லை. கிறித்தவர்களாகிய நாம் தான் அவரை இனி, பகைமுரணாகிய நாம் தமிழரையும் திரு. சீமானையும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளவேண்டும்.

இன அரசியலை முதலில் பேசி பார்த்தார்; அது சாதி கட்டமைப்பால் தோற்றுப்போனது; வெற்றிப் பெறவில்லை. எனவே, இப்போது மதத்தைக் கையில் எடுக்கிறார். சங்க இலக்கியம், பாட்டன், முப்பாட்டன், முருகன், மாயோன் என்று பேசிய இவர், இப்போது சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) என்று தன்னை சுருக்கிக் கொள்கிறார்.

எவருடைய பள்ளிச் சான்றிதழிலும் மதம் என்கிறபோது இந்து என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறது. சிவனியம் - மாலியம் என்பது அறவே இல்லை. லிங்காயத்து மட்டுமே தனி மதமாக இந்தியாவில் உள்ளது. இந்த நவீன சங்கரர் - திரு. சீமான் சிவனியத்தைக் கடந்த ஐம்பெருங்காப்பியம் தந்த சமணத்தையோ (பௌத்தத்தையோ), ஆசிவகத்தையோ விலக்கி வைக்கிறார்.

கருஞ்சட்டைக்குள் இவர் போட்டுள்ள பூநூல் இப்போது வெளியே தெரிகிறது. கடந்த பதினொரு ஆண்டுகளாக இவர் பதுக்கி வைத்திருந்த பூனைக்குட்டி முட்டி மோதி இப்போது வெளியே வந்துவிட்டது. இவர்பசுத்தோல் போர்த்திய காகிதப்புலி’. இங்கே பசுவும் புலியும் ஒரு குறியீடு.

சீமானின் நாம் தமிழர் கட்சியின் கிளைக் கழகமாக உதயமாகி, தமிழ் தேசியத்தை முன்வைத்த (ஐரோப்பிய) கிறித்தவர்கள் இனி தங்கள் முகமூடிகளை கழட்டி வைத்துவிட வேண்டும். பாஜகவுக்குராமராஜ்ஜியம்என்றால், நாம் தமிழருக்குமுருகராஜ்ஜியம்’. பாஜகவுக்குதேசிய இந்துத்துவாஎன்றால் நாம் தமிழருக்குதமிழ் இந்துத்துவா’. இளையராஜா, ஜேசுதாஸ் போன்றவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து, இந்துவாக காணாமல் போயினர். எவரும் கவலைப்படவில்லை. அவர்களின் வரிசையில் இன்னொரு வாரிசு தான் இந்த சீமான். இவரிடம் இருப்பது சண்டித்தனம் அல்ல.. மாறாக, சங்கித்தனம். கிறிஸ்தவராக, நாத்திகராக, இப்போது முருக பக்தனாக, சிவ பக்தனாக.. இவர் எடுக்காத வேஷம் இல்லை. இவரின் மத அடையாள அரசியல், சாதி அடையாள அரசியல், இன அடையாள அரசியல் பாசிசத்தின் மறுவடிவமே. ஆசியா கண்டத்தைச் சேர்ந்த இயேசுவை ஐரோப்பியர் என்று அடையாளப்படுத்துவது இவரின் அறியாமை. கீழடியின் மதமின்மையை இவர் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார். மதச் சிறுபான்மையினராகிய நமக்கு இவர் எப்போதும் பகைமுரணே. இவர் பசுத்தோல் போர்த்திய காகிதப்புலி-கூ420.