Namvazhvu
குடந்தை ஞானி இயேசுவை சந்திப்பதால் அடையும் அனுபவம்
Monday, 25 Oct 2021 11:56 am
Namvazhvu

Namvazhvu

திருத்தூதர்கள், கடவுளின் அன்பின் வல்லமையை இயேசுவில் அனுபவித்ததால், நற்செய்தி அறிவிப்பதற்கு அவர்களுக்கு பேரார்வம் ஏற்பட்டது என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், அக்டோபர் 21 வியாழனன்று கூறினார்.

அக்டோபர் 24, ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் 95வது உலக மறைபரப்புப்பணி ஞாயிறையொட்டி இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், ஆண்டவரைச் சந்திப்பதால் கிடைக்கும் ஆழமான அனுபவம், நற்செய்தியை அறிவிப்பதற்கு எப்போதும் உந்துசக்தியாக உள்ளது என்று கூறினார்.

திருத்தூதர்கள் இயேசுவின் நட்பை அனுபவித்தவர்கள், அவர் அறிவித்த நற்பேறுபெற்றோர் பற்றி கேட்டவர்கள், ஏழைகள் எவ்வாறு நற்செய்தியை உள்வாங்கினர் மற்றும், அவர் நோயாளிகளை எவ்வாறு தொட்டார் என்பதையும் பார்த்தவர்கள் என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

இயேசுவைச் சந்திப்பதால் கிடைக்கும் அனுபவம், நன்றியுணர்வை மேலோங்கச் செய்கிறது என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், மறைபரப்புப் பணியாளர்கள், நன்றியுணர்வால் உந்தப்பட்டு, பரிவிரக்கம் மற்றும் எதிர்நோக்கின் நற்செய்தியைக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.

திருஅவையின் புள்ளிவிவரங்கள்

மேலும், இணையவழி நேரடி ஒளிபரப்பின் வழியே நடைபெற்ற, இச்செய்தியாளர் சந்திப்பில், 2019ம் ஆண்டின் உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை குறித்த புள்ளிவிவரங்களும் வழங்கப்பட்டன.

உலக அளவில், ஐரோப்பா தவிர, மற்ற அனைத்துக் கண்டங்களிலும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, ஒரு கோடியே 54 இலட்சமாகவும்,  உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 17.74 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

ஆயர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்து அவ்வெண்ணிக்கை, 5,364 ஆகவும், அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து அது 4,14,336 ஆகவும், இவ்வெண்ணிக்கை ஐரோப்பா (-2,608),, அமெரிக்கா (-690) மற்றும், ஓசியானியாவில் (-69)  குறைந்து, ஆப்ரிக்கா (+1,649) மற்றும் ஆசியாவில் (+1,989) அதிகரித்துள்ளது.

உலக அளவில், 72,667 பாலர் பள்ளிகள், 98,925 ஆரம்பப் பள்ளிகள், மற்றும், 49,552 நடுத்தரப் பள்ளிகள் உள்ளன. திருஅவையின் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 24 இலட்சமாகவும், பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 38 இலட்சமாகவும் உயர்ந்துள்ளன.

5,200க்கு மேற்பட்ட மருத்துவமனைகள், ஏறத்தாழ 15,000 சிறுமருந்தகங்கள் (பெருமளவில் ஆப்ரிக்கா, அமெரிக்கா), மற்றும், மாற்றுத்திறனாளிகள், வயதுமுதிர்ந்தோர், தொழுநோயாளர் போன்றோரைப் பராமரிக்கும் எண்ணற்ற இல்லங்களும் திருஅவையில் உள்ளன.

மறைபரப்புப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு நிதியுதவி திரட்டவும், இறைவேண்டல்கள் புரியவும், கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு மறைபரப்புப்பணி ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. (Fides)