Namvazhvu
குடந்தை ஞானி வேட்டை நாய்கள்
Wednesday, 13 Oct 2021 06:28 am
Namvazhvu

Namvazhvu

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை, சுதந்திர இந்தியாவின் மற்றுமொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையாகும். வெறிப்பிடித்த வேட்டை நாய்கள் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்ட, அவர்கள் அகோரப் பசியைத் தீர்க்க ஒன்பது உயிர்களைக் கடித்து கொன்றுள்ளன. கடந்த ஞாயிற்றுக் கிழமை, அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள டிக்குனியா என்னும் கிராமத்திற்கு வருகைதரவிருந்த துணை முதல்வர் கேசவ் மௌரியா, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் அற வழியில், ஆயுதங்கள் ஏந்தாமல், கறுப்புக் கொடி ஏந்தி, சாலையில் அணிவகுத்து, வாகனங்கள் மேற்கொண்டு போகாதவாறு மறித்து நடந்து சென்றனர். அப்போது அவ்வழியே காரில் வந்த அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஓட்டிவந்த காரும் மற்றுமொரு காரும் அங்கு நடந்து சென்ற விவசாயிகள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திலேயே தல்ஜித் சிங் (35), குர்வீந்தர் சிங் (19), லவ்ப்ரீத் சிங் (20), நச்சட்டார் சிங் (60) ஆகிய நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்; பின்னர் நடந்த கலவரத்தில் அக்காரில் வந்த பொதுமக்கள் நால்வரும், இதனைப் படம் பிடித்த ரத்தன் காஷ்யப் என்ற பத்திரிகையாளர் ஒருவருமாக என்று ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆசிஷ் மிஸ்ரா தன் துப்பாக்கியைப் பயன்படுத்தி பத்திரிகையாளரைச் சுட்டுவிட்டு, தப்பித்திருக்கிறார். முதல் தகவல் அறிக்கையிலும் இது இடம்பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். சுதந்திர இந்தியாவில், பாஜக ஆட்சியாளர்கள் நிகழ்த்திய மற்றுமொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையாகும்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. செல்போன் இணையச்சேவை தடைசெய்யப்பட்டுள்ளது. கள நிலவரத்தை அறிய சென்ற அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டு, பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். இது ஜனநாயக நாடா? உத்தரபிரதேசம் இந்தியாவில் உள்ள இன்னொரு மாநிலமா? இல்லை அண்டை நாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகம் முழுவதும் இந்தியா முழுவதும் கண்டனம் தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய பிறகு, உ.பி காவல்துறை ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை அவர் உட்பட எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த பாஜகவினர் கனவு ராமர் ராஜ்ஜியம்; ஆனால், நடப்பதோ ரௌடி ராஜ்ஜியம். கொலைகாரர்களின் கொடூர பட்டப் பகல் அரங்கேற்றம் இது. இந்த இந்திய தாலிபான்கள்தான் ஆப்கன் தாலிபான்களை குறை சொல்வார்கள். மருந்துக்கு கூட இரக்கமில்லாதவர்கள்; கல் நெஞ்சக் காரர்கள். வேட்டை நாய்கள் இவர்கள். ஏழைகள் இவர்கள் கண்களில் படக்கூடாது; சுற்றுச் சுவர் கட்டி மறைத்து சிறை வைத்து விடுவார்கள்; தலித்துகள் யாரும் தென்படக் கூடாது; மிரட்டிவிடுவார்கள்; தலித் சிறுமிகள் தென்படக்கூடாது; பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவார்கள்; முஸ்லீம்கள் தெரியக்கூடாது; தீவிரவாதிகள் என்று திகாருக்கு அனுப்பி விடுவார்கள்; பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது; பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று விளாசுவார்கள். விவசாயிகள் யாரும் போராடிவிடக்கூடாது; கார் ஏற்றி கொன்று விடுவார்கள். இந்த ஜனநாயக நாட்டில் யாருமே எதையுமே எதிர்த்து கேள்வியே கேட்கக்கூடாது என்றால் இது ஜனநாயகமா? எதேச்சதிகாரமா? போராட்டமே கூடாது என்றால், யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றால் இது என்ன வகை அரசியல்?

பாஜகவின் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தமது கட்சியினர் ஊருக்கு நூறுபேர் தடிகளோடு சென்று போராடும் விவசாயிகளை விரட்டுங்கள்; ஜாமீன் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று வன்முறையைத் தூண்டிவிடுகிறார். ஹரியானாவின் கர்னால் மாவட்ட துணை கலெக்டர் ஆயுஷ் சின்ஹா, போராடும் விவசாயிகளின் மண்டையைப் பிளந்து ஓட விடுங்கள் என்று போலீசுக்கு உத்தரவிடுகிறார். அப்படி மண்டைகள் உடைக்கப்பட்டதை அவசியம்தான் என்று அந்த முதல்வர் வழிமொழிகிறார். இவையெல்லாம் என்ன வகை அரசியல்?

மன்கிபாத் மன்னர் வாய் திறக்கவே மாட்டேன் என்கிறார்; நடிகைகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் களமாடும் இவர், இது குறித்து எதையும் செய்யமாட்டேன் என்கிறார். இந்தியா - ஜனநாயகத்தின் தாய் என்று ஐ.நாவில் மனசாட்சியே இல்லாமல், வாய் கூசாமல் பேசுகிறார். தீபாவளிக்கு இரண்டு விளக்கு ஏற்றுங்கள் என்று சம்பந்தமே இல்லாமல் மறதி நோயில் பேசுகிறார்.

போராட்டம் என்பது ஜனநாயகத்தின் அங்கம். எதிர்ப்பு என்பது சுதந்திரத்தின் மற்றுமொரு அங்கம். மாற்றுக் கருத்தே கூடாது என்றால் அதுதான் பாசிசம். எதிர்க்கவே கூடாது என்றால் அதுதான் எதேச்சதிகாரம். போராடவே கூடாது என்றால் அதுதான் அடிமைத்தனம்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டங்களை முடக்குவதற்கு, குறிப்பாக டெல்லி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கலவரத்தை அவர்களே திட்டமிட்டனர். அதேபோன்றுதான் 350 நாட்களாக அறவழியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடுகின்றனர். 2022இல் நடைபெறும் உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வ, இந்த விவசாயிகள் போராட்டம் நிச்சயம் உதவும். மேற்கு உத்தரபிரதேசத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் எதிர்ப்பு வலுக்கிறது; இம்மாவட்டத்தில் அதிகம் வசிக்கும் சீக்கியர்களும் ஜாட் சமூகத்தினரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். ஆகையால் தேர்தலுக்கு வலுசேர்க்கும் இந்த விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றியிருக்கிறது. 45 இலட்சம் வரை நிவாரணம் தந்து இச்சம்பவத்திற்கும், இப்பிரச்சனைக்கும் தற்காலிக அடக்கம் நடத்தியிருக்கிறது யோகி தலைமையிலான உத்தரபிரதேச அரசு. ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை; துணை முதல்வரோ, உள்துறை இணை அமைச்சரோ தங்கள் பதவியை ராஜினாமா செய்திடவில்லை. லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை ஒரு தேச அவமானம்; உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட அந்த விவசாயிகள் ஏந்திய கறுப்புக்கொடியை இனிவரும் நாட்களில் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஏந்த வேண்டும். இனி பாஜக எந்தத் தேர்தலிலும் வேரூன்ற முடியாதபடி அதனை வேரறுக்க வேண்டும். வேங்கைகளை வேட்டை நாய்கள் வேட்டையாடிவிட்டன. கொலைகாரர்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள். ஆகையால், ஒவ்வொரு தேர்தலும் பாஜக தோல்வியடைந்து, பாடம் கற்கும் பாடசாலையாக மாற வேண்டும். விவசாயிகளை தடியெடுத்து, அவர்கள் அடிக்கிறார்கள். ஆகையால்  ஒவ்வொரு கலப்பையும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஆயுதமாக மாற வேண்டும். ஒவ்வொரு விரல் மையும் சுதந்திர நாட்டிற்கான முன்னுரையாக அமைய வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளை நொறுக்குபவர்கள், இனி நெருக்குதலுக்குள்ளாக வேண்டும். வேட்டை நாய்களை வேங்கைகள் வேட்டையாட வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு. மறந்துவிடாதீர்.