Namvazhvu
குடந்தை ஞானி ஒரு யோகியின் யோக்கியதை!
Monday, 27 Sep 2021 12:13 pm
Namvazhvu

Namvazhvu

ஒரு யோகியின் யோக்கியதை!

யோகி. இது வெறும் அடைமொழி மட்டுமே. துறவி; இது இவரின் அடையாளம் மட்டுமே. பதவி, ஆடம்பரம் உட்பட இவர் எதையும் துறந்ததாக தெரியவில்லை. பொதுவாகவே, ஒரு துறவிக்கு இலக்கணமான, அடையாளமான அன்பு, கருணை என்பது இவரிடம் கிஞ்சித்தும் இல்லை. காவியுடைக்கு களங்கத்தையும் சுவாமி விவேகானந்தர் வழிவந்த துறவுக்கு இடறலையும் இவர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இந்துத்துவ அரசியலில் இவர் பெரும்புள்ளியாக வளர்ந்தாலும், இந்திய அரசியலுக்கு இவர் ஒரு கரும்புள்ளியே!

 பாஜகவின் பதவி அரசியலில் துறவிகளுக்கு பஞ்சம் இல்லை. திருமணத்தைத் துறந்தவர்கள், திருமணத்திற்குப் பிறகு மனைவியைத் துரத்தியவர்கள் (துறந்தவர்கள்), துறவி என்ற போர்வையில் யானை உலவும் காடுகளைக் கபளீகரம் செய்து, விலை உயர்ந்த சொகுசு கார்களிலும் பைக்குகளிலும் ஆறுகளை மீட்போம் என்று யாத்திரை போகின்றவர்கள், தீவையே விலைக்கு வாங்கி கைலாசா அமைப்பவர்கள், பதஞ்சலி என்ற பெயரில் நிறுவனம் உருவாக்கி, கோடிகளில் வரி விலக்குப் பெற்று திரியும் காவி அம்பானிகள் என்று இங்கு எல்லாருக்குமே இடம் உண்டு. ஆர்எஸ்எஸ் பாசறைகளில் வேடதாரிகள் ஏராளம் உண்டு. இவர்களுக்கு மதம் மட்டுமே அரசியல்; அரசியல் என்பது இவர்களுக்கு மதம் மட்டுமே. இந்தியாவின் பன்மைவாதம் இவர்களுக்கு மிகப்பெரிய உறுத்தலே. ஆகையால்தான் மாதம் ஒன்று பிறந்தால் யாத்திரை என்ற பெயரில் வீதிகளில் உலாவுவார்கள். மதத்தின் பெயரால் காற்றில் கம்பு சுத்துவார்கள்; யோகா செய்து கபளீகரம் செய்வார்கள். மீறி, எதிர்ப்பவர்களை வம்புக்கு இழுப்பார்கள். யானை முகத்தானை வைத்து ஊர்வலம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதம் வளர்ப்பார்கள். எங்கேயாவது தேர்தல் என்று வந்துவிட்டாலே இந்து - முஸ்லீம் பகையை இவர்கள் வளர்ப்பார்கள். தேர்தல் என்றாலே அப்பட்டமான வகுப்புவாதத்தையும் சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையும் தவிர இவர்களிடம் வேறு எதுவும் மிஞ்சுவதே இல்லை.

உத்தரபிரதேசம்! இது மாநிலம் அல்ல. இதுதான் இந்துத்துவாவின் கருவறை. ஆகையால்தான் அத்வானி தலைமையில் தேச யாத்திரை செய்து, அயோத்தியைக் கையிலெடுத்து இந்திய அரசியலையே தீர்மானித்தார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவின் மதச்சார்பின்மை மட்டுமல்ல; ஜனநாயகத்தையும் கருவறுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையையும் தொடர்ந்து பட்டியலிட்டு செய்து கொண்டேயிருக்கிறார்கள். குஜராத் கலவரம் - கோத்ரா ரயில் எரிப்பு இவையெல்லாம் இதன் திட்டமிட்ட கூடுதல் செயல்பாடுகளே. இந்துத்துவக் கொள்கையை செயல்படுத்துவதற்கு ஒரு சோதனைக் கூடமாகத்தான் இன்றுவரை உத்தரபிரதேசத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள்.

இங்கு மதமாற்ற தடைச்சட்டம் மட்டுமல்ல; மாவட்டத்தின் பெயர் மாற்றம், பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம், ஜாட் சமூக வாக்குகளை அள்ள, அலிகரில் மகேந்திர பிரதாப் சிங் பெயரில் புதிய பல்கலைக் கழகம், உணவுப் பண்பாட்டில் உக்கிரம், கங்கை நதி அரசியல், கும்ப மேளா கும்மாளம், தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறை, மாட்டுக்கறி அரசியல் என்று அனைத்து விதங்களிலும் 80 மக்களவைத் தொகுதிகள், 403 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர். மத்தியில் ஆளும் குஜராத்திகளின் கொட்டம் இந்த உத்தரபிரதேசத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட உத்தரபிரதேசத்தில் 2022-ல் சட்டப்பேரவைக்கான தேர்தல் என்றாலே கலவரத்திற்கு பஞ்சமிருக்காது. இந்துக்களையும் முஸ்லீம்களையும் துருவப்படுத்துவதும் கிறிஸ்தவர்களையும் பௌத்தர்களையும் அச்சுறுத்துவதும் சர்வ சாதாரணம். கலவரச் சூழல் ஏற்படுத்தி நிலவரத்தை தங்களுக்கு சாதகமாக்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே. எல்லா வளமும் இருந்தும் மாநிலம் ஏன் வளரவில்லை என்றால் ‘அடோப் போட்டோ ஷாப்பில்’ அமர்க்களம் செய்து, மேற்கு வங்கத்தில் மம்தா கட்டிய பாலத்தை உத்தர பிரதேசத்தில் தாங்கள் கட்டியது போன்று பாவ்லா செய்து பம்மாத்து பண்ணுவார்கள். உத்தரபிரதேசத்தில் ஏன் ஏழைகளுக்கு அரைவயிற்று கஞ்சிக்கு வழியில்லை? என்று பத்திரிகையாளர் கேட்டால், மாநில முதல்வர் யோகி, ‘இந்த உணவுப் பற்றாக்குறைக்கு ‘அப்பா ஜான்’ (முஸ்லீம் தந்தை) பிள்ளைகள்தான் காரணம்; அவர்கள் தின்று தீர்த்துவிட்டார்கள்; நேபாளத்திற்கும் பங்காளதேசத்திற்கும் கடத்திவிட்டார்கள் என்று புராணக் கதை அளக்கிறார். ஒவ்வொன்றையும் மத ரீதியாக அணுகும் மாட்டு மூளை ஒரு மாநில முதல்வருக்கு கூடாது. ஒரு மாநில முதல்வர் இப்படி மத அடிப்படையில் பேசுவதும் இயங்குவதும் எந்த விதத்தில் நியாயம்? இந்த யோகியின் யோக்கியதை இவ்வளவுதான். ஏழு ஆண்டுகளில் இந்தியா வளராததற்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என்று பிதற்றும் இவர்கள் இந்தியாவின் உணவுப் பஞ்சத்திற்கு முஸ்லீம்கள்தான் காரணம் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்வது ஏன்?

கும்பமேளாவை வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, இந்தியாவின் கொரோனா பரவலுக்கு தப்லி மஜ்ஜித்தான் காரணம் என்றவர்கள்தான் இவர்கள். கோரக்பூர் மருத்துவமனையில் 60 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாமல் பலியானபோது, தம் சொந்த காசைக் கொடுத்து காப்பாற்றிய நிரபராதி மருத்துவர் கஃபில்கான்தான் காரணம் என்று மதவாதம் செய்து சிறையில் அடைப்பார்கள். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றவில்லை என்று புகார் அளித்தால், புரளி பரப்புகிறீர்கள் என்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சுவார்கள். கொரோனா நோயாளிகளின் பிணங்கள் கங்கையில் ஏன் மிதக்கின்றன என்றால், பீகார்தான் காரணம் என்று அந்தர் பல்டி அடிப்பார்கள். இவரைத்தான், பாரதப் பிரதமர் மோடி அவர்கள், சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தினார் என்று பாராட்டி மகிழ்வார்.

குஜராத்தில் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய சிலையான பட்டேல் (183மீ) சிலையை விட, உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலையை நிறுவி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளார். மேலும் சாமியார்களின் சிலைகள், பாஜக அரசியல் தலைவர்களின் சிலைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் என்று சாலைகள்தோறும் சிலைகள் வைத்து மாயாவதி பாணியில் அரசியல் செய்ய உள்ளார். ஆசைகளைத் துறந்து ஆன்மீகத்தில் மூழ்க வேண்டிய இந்த கோரக்பூர் மடத்தின் தலைமை மடாதிபதி, ஆர்எஸ்எஸ் அரவணைப்பில், தொடர்ந்து ஐந்துமுறை கோரக்பூர் எம்பியாக தேர்வாகியது உத்திரபிரதேச அரசியலில் மட்டுமே சாத்தியமாகும்.

இந்தக் காவிப் புதல்வன் ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில்தான், அரசுப் பணியிலிருந்து விருப்புப் ஓய்வுப் பெற்ற கையோடு, பாஜகவில் சேரும் கூத்தும் நடைபெறும். உதாரணம் விருப்ப ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அர்விந்த் குமார் ஷர்மா, ஐந்தே மாதத்தில் சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். இரண்டு துணை முதல்வர்கள் இருந்தாலும், யோகியின் ஆதிக்கமே கொடி கட்டி பறக்கிறது. ஆலமரமாக வளர்ந்து நிற்கும் யோகியின் உத்தரபிரதேச அரசியலின்கீழ் வேறு தலைவர்கள் தலையெடுப்பது மிகவும் கஷ்டமே.

பிரயக்ராஜ் நகரின் மிகப்பெரிய அனுமான் கோயில் தலைமை பூசாரியும் அகில பாரதிய அகாத பரிஷத்தின் தலைமை மத குருவான நரேந்திர கிரி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் இவர், உன்னாவ் தலித் சிறுமிகளின் படுகொலைக்கு மௌன விரதம் கடைபிடிக்கிறார். பிணங்களிலும் சாதி பார்த்து, வாழும் மனிதர்களில் மதம் பார்த்து, செயல்படும் இந்த யோகி இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளியே. இவர் காவி போர்த்திய கருப்பு ஆடு. உத்தர பிரதேசம்; இது ஜனநாயகத்தைச் சுட்டெரிக்கும் உக்கிர பிரதேசம்.