No icon

35வது பொதுப் பேரவை

இந்திய ஆயர் பேரவையின் புதிய தலைவராக பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத்

இந்திய ஆயர் பேரவையின் புதிய தலைவராக, திருச்சூர் உயர்மறைமாவட்ட பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்களும், துணைத் தலைவர்களாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மற்றும் ஆயர்  ஜோசப் தாமஸ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 6 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தொடங்கிய இந்திய ஆயர் பேரவையின் 35வது பொதுப் பேரவை, 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்துள்ளவேளை, அப்பேரவைக்கான புதிய தலைவர், இரண்டு துணைத்தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருச்சூர் உயர்மறைமாவட்ட பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் புதிய தலைவராகவும், சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் பத்தேரி ஆயர் ஜோசப் தாமஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், வசை மறைமாவட்ட ஆயரான பேராயர் ஃபெலிக்ஸ் மச்சாடோ பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத்

பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள், தென்னிந்திய மாநிலமான கேரளாவில், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் திருச்சூர் உயர்மறைமாவட்டத்தின் மூன்றாவது பேராயராக, 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றார். 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுக்காட்டில் பிறந்த இவர், 1977 ஆம் ஆண்டு, மார்ச் 14 ஆம் தேதி அருள்பணியாளாராக திருப்பொழிவு பெற்றார். இறையியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் கிழக்கு வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டங்களில் முனைவர் பட்டமும்  பெற்றவர்.

2004 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி திருச்சூர் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2007 ஜனவரி 22 ஆம் தேதி  அன்று திருச்சூர் பேராயராக நியமிக்கப்பட்ட அவர், கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவராகவும்,  KCBCE  கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி,

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி தமிழகத்தின் திருச்சியில் பிறந்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி, திருச்சியில் ஆயராகத் திருப்பொழிவுசெய்யப்பட்டார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கான திருப்பீடத் திருத்தூதராகப்  பணியாற்றிய இவர், 2012 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சென்னை மற்றும் மயிலாப்பூரின் புதிய பேராயராக நியமிக்கப்பட்டார்.

ஆயர் ஜோசப் தாமஸ்

ஆயர் ஜோசப் தாமஸ் அவர்கள், பத்தனம்திட்டா, மாவட்டத்தில் உள்ள வடசேரிக்கர கிராமத்தில் மே 13 ஆம் தேதி, 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1979 ஆம் ஆண்டில், கடப்பாக்கடா சீரோ மலங்கரா-வழிபாட்டுமுறையின் புனித தோமையார் ஆலயத்தின் அதிபராக கொல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

Comment